Friday, December 25, 2009

உணவு நெருக்கடி - வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்

உணவு பற்றாக்குறையால் மனித நாகரிகம் வீழ்ந்துவிடுமா?’ என்ற கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பினால் நகைப்பார்கள். இன்றோ, அது நடந்துவிடுமோ என்ற அச்சத்துடன்தான் அனைவரும் எதிர்நோக்குகின்றனர். 2008-ம் ஆண்டு உலகம் ‘பட்டினிச் சுனாமி’ என்ற பெரும் தாக்குதலாலேயே விழித்தெழுந்தது. இதுவரை இல்லாத நெருக்கடியும், விலையேற்றமும் உலகில் கொந்தளிப்பை உருவாக்கியது. உணவுவிலைப் பட்டியல் தயாரிக்கப்பட்ட 1845ம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இப்படியொரு விலையேற்றத்தை உலகமக்கள் இதுவரை சந்தித்தது இல்லை.

2005 முதல் உணவு தானியங்களின் விலை 75 சதவீதம் உணர்ந்திருந்தாலும், சில அத்தியாவசியப் பொருட்களான அரிசி உட்பட 150 சதம் விலை உயர்ந்துள்ளது. இதனால் உடனடியாக பட்டினி உலகத்திற்கு 2008-ம் ஆண்டு மட்டும் 12.5 கோடி மக்கள் தள்ளப்பட்டனர். 2007-ல் 84.8 கோடியாக இருந்த பட்டினியாளர்கள் 2008-ல் 92.3 கோடியாக உயர்ந்தனர். மேலும் 100 கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்விளைவு உலகில் உணவுக்கான சண்டைகள் (Food wars) தீவிரமடைந்துள்ளன. ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானா முதல் பிலிப்பைன்ஸ் வரை 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுக் கலவரங்கள், சூறையாடல்கள் நடைபெற்றுள்ளன. மேலும் சில நாடுகளில் பெரும் எழுச்சியான ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. சில சின்னஞ்சிறு நாடுகளில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ளது.

இந்த உணவு நெருக்கடிக்கும், விலையேற்றத்திற்கும் காரணம் என்ன? தேவைக்கும், அளிப்புக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி முக்கிய காரணம் அல்ல. பெட்ரோல் விலை 40 டாலரிலிருந்து 150 டாலர் வரையில் ஏறுவதும், பிறகு 40 டாலர் வரை இறங்குவதும் சந்தையில் அளிப்புக்கும், தேவைக்கும் (Supply vs demand) உள்ள முரண்பாடு தீர்மானிப்பது இல்லை என்பது தெளிவாகும். 1950ம் ஆண்டு உலக உணவு உற்பத்தி 60.31 லட்சம் டன்களாகும். அன்றைய மக்கள் தொகை 200.54 கோடியாகும். 2007ம் ஆண்டு உலக உணவு உற்பத்தி அளவு 207.60 கோடியாகும். இக்காலத்தில் மக்கள் தொகை 2.6 மடங்கு உயர்ந்துள்ளது. உணவு தானிய உற்பத்தி 3.3 மடங்கு உயர்ந்துள்ளது. சராசரியாக ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு 314 கிலோ உணவு கிடைக்கவேண்டும். ஆனால் வளர்ந்த அமெரிக்காவில் 1042 கிலோவும், ஆப்பிரிக்காவில் 162 கிலோவும்தான் கிடைக்கிறது. எனவே இந்த 2007-2008ல் ஏற்பட்ட நெருக்கடி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட அதுவும் வளர்ந்த நாடுகளினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாகும்.

கட்டமைப்பு சீரமைப்பின் சீரழிவு:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால், உலகவங்கியும், சர்வதேச நிதிநிறுவனமும் சுமார் 90 நாடுகள் மீது கட்டமைப்பு சீரமைப்பு (Structural Adjustment) திட்டத்தை திணித்தன. இதை அமுலாக்கிய அனைத்து நாடுகளிலும் இந்த உணவு நெருக்கடி தற்போது தீவிரமாகியுள்ளது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக உலகவர்த்தக அமைப்பு 1995-ல் உருவாகி, வளரும் நாடுகளின் வணிகம் மற்றும் விவசாயத்தின் மீது தாக்குதல் தொடுத்தன. தொடர்ச்சியாக அடுத்த சில ஆண்டுகளில் விவசாய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. மேற்கண்ட திட்டங்களின் சாராம்சம், விவசாயத்தில் பொது முதலீட்டைக் குறைப்பது, தாராளமயம், தனியார்மயக் கொள்கை மூலமாக விவசாய வணிகத்திலும் உணவு சந்தையிலும், பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, விவசாயிகளுக்கு ஆதார விலை கிடைக்கும் வகையில் கடைபிடிக்கப்பட்ட வணிகக்கட்டுப்பாடுகள், உற்பத்திக் கட்டுப்பாடு, மற்றும் அரசு கொள்முதல் ஆகியவை விவசாய ஒப்பந்தம் மூலம் தளர்த்துவது.

விவசாயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு தாராளமாக அனுமதி அளிக்கப்பட்டன. இதன் விளைவாக சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் சந்தைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. சந்தைகளே விவசாய உற்பத்தியை தீர்மானிக்கும் இடமாகவும் மாறியது. பெரும் நிறுவனங்கள் இந்த இடத்தை அபகரித்து கொள்ளை லாபங்களை ஈட்ட ஆரம்பித்தன. இந்த உலகமய பின்னணியில் ஒரு விவசாயி நிலைமாற்றம் குறித்து திருமிகு வந்தனா சிவா அவர்களின் கூற்று கவனிக்கத்தக்கது "ஒரு விவசாயி சமூக,பண்பாடு மற்றும் பெருளாதார ரீதியில் தான் ஒரு உற்பத்தியாளன் என்ற அடையாளத்தை இழந்து நிலபிரபுக்கள், வட்டிக்கடைகாரர் மூலமாக சந்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடம் விதை, உரம் ஆகிய இடுபொருட்களை வாங்கும் நுகர்வாளனாக மாறிவிட்டான்" என்பதுதான் கட்டமைப்பு சீரமைப்பின் விளைவு. இக்கொள்கைதான் நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும் அடிப்படைக் காரணம்.

பெரும் நிறுவனங்களின் லாபவேட்டைகள் :

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக்கொண்டு உணவு விலையை ஏற்ற ஆரம்பித்தன. இந ்நிறுவனங்கள் விவசாய சந்தைகளையும், உணவு உற்பத்தியையும் இணைத்து விலை நிர்ணயிப்பதில் வெற்றி கண்டன. தாராளமயம், தனியார்மயத்தால் உணவு சுழற்சியை உலகமயமாக்கியதாலும், உணவு உற்பத்தி கட்டமைப்பை மாற்றியதாலும் இவர்களுக்கு இது சாத்தியமானது. 2007ம் ஆண்டு கார்கில்(cargills)கம்பெனி விவசாய வணிகத்தில் 36 சதம் லாபம் ஈட்டியுள்ளது. ஏடிஎம்(ADM) 67 சதவீதமும், பங்கி(Bunges) 49 சதவீதமும் லாபமடைந்துள்ளனர். 2008ம் ஆண்டு முதல் மூன்றுமாதத்தில் கார்கில் கம்பெனியின் மொத்த வருமானம் 86 சதம் உயர்ந்துள்ளது. ஏடிஎம் நிறுவனத்தின் மொத்தலாபம் 55 சதமும், பங்கி கம்பெனியின் மொத்த லாபம் 189 சதமும் உயர்ந்துள்ளது. உரக் கம்பெனிகளில் 2007ல் பொட்டாஷ் கார்ப்பொரஷன் 72 சதம் லாபமும், மொசைக் (Mosaics) 141 சதம் லாபமும் ஈட்டியுள்ளனர். 2008 முதல் மூன்று மாதம் மட்டும் பொட்டாஷ் கார்ப்பொரேஷன் நிகர வருமானம் 186 சதம் அதிகரித்துள்ளது. மொசைக் உர நிறுவனத்தின் நிகர வருமானம் 1200 சதம் அதிகரித்துள்ளது. விதைகள் மற்றும் விவசாய வேதிப்பொருட்கள் நிறுவனங்களான மன்சோட்டா(Mansanto) 44 சதமும், டூபான்ட் 19 சதமும், சைன்ஜென்டா(Syngenta) 28 சதமும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த விலையேற்றங்கள் எதுவும் சிறுவிவசாயிகளுக்கு எந்தவிதமான பலனையும் தரவில்லை. காரணம் இன்றைய உணவு வர்த்தக சட்டத்தை இயற்றுவதும், சந்தையை கட்டுபடுத்துவதும், நிதி கட்டுப்பாட்டை மேற்கொள்வதும் இப்பெரும் நிறுவனங்கள்தான். எனவே இதன் பலன் விவசாயிகளுக்கு கிடைக்காது.

மேலும் விவசாயத்தை தொழில்மயமாக்குவது ஒருபுறம் (Capitalist Industrilised Agriculture) நடைபெறுகிறது. இதன் தாக்கமாக உணவுப்பொருட்களை சர்வதேசமயமாக்கி மையப்படுத்தி செயல்படுத்தும் போக்கு விலையுயர்வுக்கு முக்கிய காரணமாகும். "சராசரியாக இன்றைய உணவு வகைகள் சமையல் ஆவதற்கு முன்பு 1300 மைல் பயணம் செய்கிறது. பழங்களையும், காய்கறிகளையும் குளிரவைத்து, மெழுகு தடவி, வர்ணம் பூசி, பிரகாசிக்கச் செய்து, நறுமணம் கமழும் முறையில் பெட்டிக்குள் அடைத்து கப்பலேற்றுவது வரை பணிகள் தொடர்கின்றது. இந்த நடவடிக்கை அனைத்தும் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளின் தரத்தை உயர்த்துவதில்லை. மாறாக நீண்டதூர விநியோகத்திற்கும் அதன் அலமாரி வாழ்வுக்குமே இந்த நடவடிக்கை உதவுகிறது" என்று டேனியல் இம்மோப் கூறுகின்றார். இந்த முதலாளித்துவ தொழில்மய விவசாயம், உற்பத்திக்கும், உண்பதற்கும் இடையிலான பணிகளுக்காக ஒரு கலோரி எரிசக்தி உணவை பெறுவதற்கு 10 கலோரி எரிசக்தியை செலவிடுகின்றது. எனவே, இந்த விலையேற்றம், வளர்ந்த நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும், இவர்களால் இவர்களுக்கு இவர்களே ஏழைநாட்டு மக்களிடமிருந்து சூறையாடிய லாப வேட்டையாகும்.

முதலில் ஏற்றுமதி அடுத்து உணவு:

எப்பொழுதெல்லாம் உணவு தானியங்கள் வணிகமயமானதோ அப்பொழுதெல்லாம் பட்டினிச்சாவுகள் அரங்கேறி உள்ளன. இந்தியாவில் பிரிட்டிஷ் வருகையையொட்டி ஏற்பட்ட போக்குவரத்து, தகவல் தொடர்புமுறைகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. உணவுப்பொருட்களின் ஏற்றுமதிக்காக இந்திய விவாசாயிகள் நிர்பந்திக்கப்பட்டனர். 1875 முதல் 1900வரை இந்தியாவின் 1.20கோடி முதல் 2.90 கோடிவரை மக்கள் பட்டினியால் மடிந்தனர். இக்காலத்தில்தான் இந்தியாவின் தானிய ஏற்றுமதி 30 லட்சம் டன்னிலிருந்து 100 லட்சம் டன்னாக உயர்ந்தது. 1840ம் ஆண்டு அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைகிழங்கு பஞ்சமும், 1943ல் வங்கப்பஞ்சமும் இதே வகையைச் சேர்ந்ததுதான்.

தற்போது இந்தியாவில் உணவுதானிய பொருட்கள் வணிகமயமாகி தற்கொலை எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிச்சென்று கொண்டிருக்கிறது. "இந்தியா உட்பட வளரும் நாடுகள் வணிகப்பயிர்களை ஏற்றுமதி செய்துவிட்டு, வடக்கு நாடுகளில் உபரியாக உள்ள உணவு தானியங்களையும், பால்பொருட்களையும் இறக்குமதி செய்து கொள்ளலாம்" என்று வளர்ந்த நாடுகள் வற்புறுத்துகின்றனர். இதற்கேற்ற முறையில் உணவுதானிய கொள்முதல் செய்வதை அரசு கைவிடவேண்டும் என்று அறிவுரை வழங்கினர். இதை பல நாடுகள் அமுலாக்கியதால் இன்று கடும் உணவு நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாடு முதன்முதலான கட்டமைப்பு சீரமைப்புக் கொள்கையை அமுல்படுத்திய நாடு. உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி நாடாக இருந்தது. இன்று அந்த நாடு அரிசி மற்றும் இதர உணவு தானியங்களை நிரந்தரமாக இறக்குமதி செய்யும் நாடாக மாறிவிட்டது. அந்நாட்டு நிலங்கள் வணிகப்பயிர்களாலும், அந்நிய பெருநிறுவனங்களுக்கு எத்தனால் தயாரிக்க வாடகைக்கு விடப்பட்டும் விவசாயம் சீரழிந்துள்ளது.

மெக்சிக்கோ சோளத்தை முதன்முதலாக விளைவித்த நாடு. பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தநாடு. உலகவங்கி, IMF அமெரிக்க கொள்கைகளை தீவிரமாக அமலாக்கியதால் இப்போது சோளத்தை இறக்குமதி செய்துதான் வாழமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 25 சதவீதம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்துதான் வாழ்கின்றனர். 1996 முதல் 2000 வரை ஆப்பிரிக்க நாடுகள் கோதுமை இறக்குமதியை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியா, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, தாய்லாந்து, வியட்நாம், ஈரான், எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய 11 நாடுகள் தானிய உற்பத்தியில் 40 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றனர். இந்நாடுகளில் கடந்த 13 ஆண்டுகளில் அதாவது, 1989-91 முதல் 2003-04வரை இவை 1.1 சதவீதம் மட்டுமே ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு மாறாக வணிகப்பயிர்கள் உற்பத்தி இக்காலத்தில் 10 மடங்கு அதிகமாக இந்நாடுகளில் விளைந்துள்ளது. இதற்கான நிலப்பரப்பும், முதலீடும் திருப்பிவிடப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக உணவு தானியத்தை வணிகப்பயிர்கள் கபளீகரம் செய்ய ஆரம்பித்துள்ளன.

இந்த வணிகப்பயிர் ஏற்றமதியால் அந்நிய செலாவணி அதிகமாக கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. மேற்கண்ட நாடுகள் ஏற்றுமதிகளை இக்காலத்தில் இரு மடங்காக உயர்த்தியபோதும் அந்நிய செலாவணி உயரவில்லை. பணவீக்கமும், வளர்ந்த நாடுகளின் நாணய சூழ்ச்சியும்தான் இதற்குக் காரணமாக அமைந்தன. பலநாடுகள் பணப்பயிர் ஏற்றுமதியால் அந்நிய செலாவணி கிடைக்கும் என்று விவசாய முறையை மாற்றி அமைத்து உணவு நெருக்கடியில் சிக்கிக்கொண்டனர். பொருளதார அறிஞர் உஸ்த்தவ் பட்நாயக் கூறுவதுபோல் "காலனித்துவ இந்திய விவசாயிகள் இங்கிலாந்திற்கு கோதுமையை கொடுத்துவிட்டு தாங்கள் பட்டினியாக கிடந்தனர். நவீன இந்திய விவசாயிகள் மேலைநாட்டினருக்கு ஊறுகாய்க்கான வெள்ளரியையும், ரோசாப்பூவையும் பயிரிட்டு ஏற்றுமதி செய்துவிட்டு பற்றாக்குறை உணவை எடுத்துக்கொள்கின்றனர்" என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரச் சந்தை, சுதந்திர வர்த்தகம்:

இதுகாலம் வரை வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து உணவு தானியங்கள் விலக்கிவைக்கப்பட்ட சகாப்தத்தை 1986ல் புன்டா டெல்லில் நடைபெற்ற உருகுவே சுற்று பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவந்தது. அதைத்தொடர்ந்து 1994,1995-களிலும் ஒப்பந்தமான விவசாய ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பு இந்த சுதந்திர சந்தை கொள்கைகள் தீவிரமாக்கின. இதன் உச்சகட்டமாக 1996ல் உலக உணவு மாநாடு ரோமில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழில்வள நாடுகள் உணவுப் பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அதிலும் சுதந்திர வர்த்தகம் அவசியம் என வலியுறுத்தின. அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து இதை ஏற்கவைத்தது.

"உணவுப் பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அடிப்படை என்பதை நாங்கள் ஏற்கிறோம். எங்களது உற்பத்தியாளர்களும், நுகர்வாளர்களும் பொருளாதார ரீதியில் பலமடைய அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தும் வகையில் நாங்கள் உணவு வர்த்தகத்தையும் இதர வர்த்தக கொள்கைகளையும் கடைபிடிப்போம்" என்று ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர். உணவுப் பாதுகாப்பிற்காக கூடிய மாநாடு அதற்கான தீர்மானத்தை இயற்றியதுடன், உணவு நெருக்கடிக்கும், விலையேற்றத்திற்குமான வழிவகையும் துரதிர்ஷ்டவசமாக உருவாக்கிவிட்டது. எனவே உணவு பாதுகாப்பிற்கான உள்நாட்டில் இருந்த தடைகளும், நாடுகளுக்கு இடையேயான தடைகளும் உடனடியாக நீக்கப்பட்டன.

இன்றைய உணவு சந்தையை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள்தான் கட்டுப்படுத்தகின்றன. இவர்களின் இளைய கூட்டாளிகளாக ஆஸ்திரேலியா, அர்ஜன்டைனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளின் பெரும் நிறுவனங்கள் இச்சந்தைகளில் கோலோச்சுகின்றன. மேற்கண்ட நாடுகள் இருவகைளில் உலக சந்தையை கைப்பற்றுகின்றன. ஒன்று உணவுதானியங்களுக்கு கூடுதலான மானியங்கள் கொடுப்பது மூலம் ஏழைநாடுகளை போட்டியிலிருந்து வெளியேற்றுகின்றனர். இரண்டாவது தொழில்மயமான இறைச்சி உற்பத்தி முறையால் சுதந்திரமான மற்றும் சிறுஉற்பத்தியாளர்கள் அழியும் நிலையை உருவாகிவிடுகின்றன.

அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு மாட்டிறைச்சிக்கு கூடுதல் மானியம் வழங்கி உலக சந்தைக்கு கொண்டுவந்ததால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் இறைச்சி வணிகம் துடைத்தெறியப்பட்டது. இதே காரணத்திற்காக இங்குள்ள பருத்தி உற்பத்தியாளர்களின் சாகுபடி வீழ்ந்து, பருத்தி விவசாயத்திலிருந்து பலர் விரட்டப்பட்டனர். அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் நாடுகளின் அதிகமானிய உதவியுடன் ஏற்றுமதி செய்ததால் கானா நாட்டின் 90 சதமும், செனகல் நாட்டில் 70 சதவீதம் கோழிப்பண்ணை தொழில் அழிந்தது.

இறைச்சி உணவு தயாரிப்பில் தொழில்மய முறைகளை பெறும் நிறுவனங்கள் புகுத்துகின்றனர். இதற்கான கால்நடை வளர்ப்பு இதர வசதிகளை அருகாமையில் ஏற்படுத்திக்கொள்கின்றனர். அமெரிக்காவில் உள்ள நான்கு பெரும்நிறுவனங்கள் 2005-ம் ஆண்டில் மாட்டிறைச்சியை 83.5 சதவீதம் கட்டுப்படுத்தின. டைசன்(Tyson) நிறுவனம் ஒருநாளைக்கு 36000 மாடுகளை வெட்டுகின்றது. இதேபோல் கார்கில் 28300 மாடுகளையும், ஸ்விப்ட் அண்ட் கோ 16759 மாடுகளையும், நேஷனல் பீப் பேக்கர்ஸ் 13000 மாடுகளையும் வெட்டுகின்றனர். பன்றி இறைச்சியில் ஸ்மித்பீல்ட் ஏகபோகமாக உள்ளது. ஒருநாளைக்கு 102900 தலைகளை வெட்டுகின்றது. இதனுடன் டைசன், கார்கில், ஸ்விப்ட் சேர்ந்து 64 சதவீதம் சந்தையை கட்டுப்படுத்துகின்றன. இதனால் அமெரிக்காவிலேயே சிறிய இறைச்சி உற்பத்தியாளர்கள் சந்தையிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர்.

ஸ்மித்பீல்ட் என்ற அமெரிக்க நிறுவனம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தனது திட்டத்தை விரிவுபடுத்தியது. அங்கு பெரும் இறைச்சி உற்பத்தியில் ஈடுபட்டதால் ருமேனிய நாட்டின் 90 சதமும், போலந்து நாட்டின் 56 சதமும் பன்றி, மாடு, கோழி உற்பத்தியாளர்கள் தொழிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். இந்த ஸ்மித்பீல்ட் நிறுவனம் போலந்து அரசிடமிருந்து ஏற்றுமதி மானியத்தை பெற்றுக்கொண்டு பன்றிக்கறிகளை லைபீரியா, கினியா, ஐவரிகோஸ்ட் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளூர்விலையைவிட சரிபாதி குறைத்து கொடுக்கிறது. இதனால் அந்நாட்டு தொழில்கள் படுத்துவிட்டன. இந்த சுதந்திர வணிகத்தால் 90ம் ஆண்டுகளில் மெக்சிகோ விவசாயிகள் 1.5 கோடிபேர்கள் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். "இந்த சுதந்திர வணிகத்தால் கடந்த பல ஆண்டுகளில் மூன்று கோடி விவசாயிகள் நிலத்தை இழந்துள்ளனர்".

இந்த உலக சந்தையில் வளரும் நாடுகள் சமமாக போட்டியிடமுடியுமா? அனைத்து வளரும் நாடுகளிலும் பெரும் நிறுவனங்கள் சூப்பர்மார்க்கெட் மூலமாக ஊடுருவி வருகின்றன. உலகில் சூப்பர் மார்க்கெட் மூலம் விற்பனையாகும் பலசரக்குகளில் 50 சதவீதத்தை ஐந்து நிறுவனங்கள் வைத்துள்ளன . இதில் வால்மார்ட் பிரதானமானது. உலக சில்லறை வர்த்தகத்தை பத்து கம்பெனிகள் கையில் வைத்துள்ளன. அதிலும் குறிப்பாக வால்மார்ட், குரேகர்(KROGER) பிரெஞ்சு கம்பெனி கேர்போர்(Carrefour) பிரிட்டிஸ் கம்பெனி டெஸ்கோ ஆதிக்கம் அதிகம். உலகில் உள்ள விதைகளில் 47 சதவீத விதைகளின் உரிமைகளை மன்சேட்டா, டுபான்ட், சைசென்டா கம்பெனிகளுக்கு சொந்தமானது.

2007ம் ஆண்டு நெஸ்ட்லே உணவு கம்பெனியில் லாபம் 9.7 பில்லியன் டாலர் ஆகும். இது 65 ஏழைநாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம். 2009 ஜனவரி 31 முடிய வால்மார்ட் கம்பெனியின் லாபம் 13.3 பில்லியன்(1 பில்லியன் 100 கோடி) டாலர் லாபம். இது 88 ஏழைநாடுகளின்,(உலகில் சரிபாதி நாடுகள்) மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம். இந்த உலக சந்தையில் ஏழைநாடுகள் எப்படி போட்டியிடமுடியும்? வளர்ந்த நாடுகளும், அதன் ஏகபோக நிறுவனங்களும், வளரும் நாடுகளின் சந்தையை கைப்பற்றி கொள்ளை லாபமடித்து, உணவு நெருக்கடியையும், விலையேற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இதே காலத்தில் நீண்ட காலத்தின் அடிப்படையில் வளரும் நாடுகளின் உணவு முறையை தங்களது உற்பத்திகளை உண்ணும் உணவு பழக்கத்திற்கு மாற்றி அமைத்திடும் பணிகளையும் இந்நாடுகள் திட்டமிட்டு செய்கின்றன.

(தொடரும்...)

- ஏ.பாக்கியம் - நன்றி - கீற்று இணையம்

Sunday, September 20, 2009

பத்தாம் வகுப்புத் தேர்வு நீக்கமும் பள்ளிக் கல்வியை விழுங்கும் திட்டமும்- க.அருணபாரதி

ஜி-20 மாநாடு

உலகமயத்தின் பேயாட்டத்தால் சீரழிக்கப்பட்ட இயற்கை, வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் என மனித குலத்தை ஆபத்தில் தள்ளயிருக்கின்றது. முதலாளிய நாடுகள், இதனை பற்றி சிறிதும் கவலை கொள்ளாது தற்பொழுது ஏற்பட்டிருக்கும் முதலாளியப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரவும், தோய்ந்து போயிருக்கும் பொருளாதாரச் சுரண்டலை விரைவுபடுத்தி விரிவுபடுத்தவும் திட்டம் தீட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தான் அரங்கேறியிருக்கிறது, அண்மையில் இலண்டனில் நிகழ்ந்த பெரும் - 20 நாடுகளின் ‘ஜி-20’ கூட்டம்.

இம்மாநாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுக்கு எதிராக காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியது, இங்கிலாந்து அரசு. வளர்ந்த முதலாளிய நாடுகளில், ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலையை தகர்த்தெறிய ‘வளரும்’ நாடுகளின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற ‘அதிமேதாவி’த் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்த தீர்மானித்திருக்கிறது தற்பொழுது ஏற்பட்டிருக்கும் மந்தநிலையின் மீட்சிக்காக, சுமார் 1.1. ட்ரில்லியன் டாலர், அதாவது 55 இலட்சம் கோடிகள் தேவை என இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தொகை ஏற்கெனவே முற்றுகையில் தவிக்கும் முதலாளிய நாடுகளிடமிருந்து வெளிப்படப் போவதில்லை. மாறாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் மூலம் வளரும் நாடுகளிடமிருந்து பெறப்பட்டு வங்கி முதலாளிகளின் மூலம் முதலாளிய நாடுகளுக்குப் போய்ச் சேரும். முதலாளிய நாடுகளும் சர்வதேச அமைப்புகளுக்கு நிதி அளிப்பதுப் போல பாசாங்கு செய்து விட்டு, இவற்றை கபளீகரம் செய்து கொள்ளும். உலகமயத்தால் கொழுத்துத் திரிந்த போது ‘ஜி-8’ என்று சுருங்கிக் கிடந்த முதலாளிய நாடுகள், தன்னிலை ஆட்டம் கண்டுள்ளதால் தற்பொழுது ‘ஜி-20’ என ‘வளரும்’ நாடுகளையும் சுரண்டல் நோக்கோடு வலிந்து சேர்த்துக் கொண்டன. இந்த ‘பெருந்தன்மை’யை வியந்தபடி முதலாளிய நாடுகளுக்கு புகழாரம் சூட்டுகிறார், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

மேலும், இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதை ‘வளர்ந்த’ நாடுகள் ‘வளரும்’ நாடுகளுக்குக் கொடுத்த அங்கீகாரம் என்கிறார். ஆம், அங்கீகாரம் தான். ‘வளரும்’ நாடுகளை சுரண்டி அடிமைப்படுத்துவதற்கு, அந்நாடுகள் தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட ‘அங்கீகாரம்’ இது. இக்கூட்டம் நிகழ்ந்த அடுத்த மாதத்தில், சீனா ஆதிக்கம் செலுத்தும் ‘hங்காய் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், இந்த சுரண்டல் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தும்படி கோரிக்கையும் விடுத்தார். முதலாளிய நாடுகளின் விருப்பம் போல் உலகப் பொருளாதாரத்தில் ‘டாலர்’ ஆதிக்கம் செலுத்தவதை முறியடிக்க சீனா, ஜி-20 மாநாட்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியுற்றதைப் பற்றி கடைசிவரை மன்மோகன் சிங் எதுவும் சொல்லாமல் தவிhத்து, அமெரிக்க விசுவாசம் பேணிணார்.

காங்கிரசு அரசின், இது போன்ற அமெரிக்க விசுவாச நடவடிக்கைகளுக்கும், தீவிர உலகமய ஆதரவுப் போக்கிற்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் வெற்றி என்று யாரேனும் கருதுவார்களானால், அது உண்மை அல்ல. அதிகரித்துக் கொண்டிருக்கும் விலைவாசி, வேலையிழப்புகள், எதிர்காலம் குறித்த உத்திரவாதமின்மை என மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக விளங்கும் உலகமயத்தை, தீவிரமாக அமல்படுத்தும் இது போன்றக் கட்சிகளை மக்கள் மன்றத்தில் சரியான முறையில் அம்பலப்படுத்தி தோலுரிக்காமல் விட்டதே, இக்கட்சிகளின் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

யஷ்பால் பள்ளிக்கல்விச் சீர்த்திருத்தப் பரிந்துரைகள்

மனித வாழ்வின் அடிப்படை உரிமைகளை விலைபேசி விற்று வருகின்றது உலகமயம். கல்வியும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகமயத்தின் வரவால் கல்வி ஏற்கெனவே முழுமையாக வணிகமயமாகிவிட்ட நிலையில், தற்பொழுது ‘சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் அக்கல்வி மேலும் சீரழிகின்றது.

பள்ளிக் கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பேராசிரியர் யஷ்பால் தலைமையிலானக் குழுவினரின் அறிக்கை 24.6.09 அன்று இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபிலிடம் வழங்கப்பட்டது. கல்வி வணிகமயமாவதையும், நிகர்நிலைக் பல்கலைக்கழகங்கள் கல்வியை விலை பேசுவதையும் இவ்வறிக்கை சில இடங்களில் சாடுகின்றது. இது போக, அவ்வறிக்கையில் மத்திய அரசிற்கு சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் இரத்து செய்யப்பட வேண்டும், பல்கலைக்கழக மானியக் குழு, ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட அமைப்புகள் கலைக்கப்பட்டு அகில இந்தியாவிற்குமான ஒரு புதிய கல்வி ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை தான் இப்பரிந்துரைகளில் முதன்மையானவை.

இவ்வறிக்கையை பெற்ற பின்னர், 25.06.09 அன்று புதுதில்லியில் அமைச்சர் கபில் சிபில் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்வுகளால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் இது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டே பத்தாம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்ய மத்திய அரசு விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அகில இந்தியா முழுவதுக்குமான ஒரே பள்ளிக் கல்வி வாரியத்தை ஏற்படுத்தவும், வெளிநாட்டுக்குச் சென்று பயிலும் இந்திய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவிற்கே அழைத்து வரவும் நடுவண் அரசு விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 23.06.09 அன்று ‘தி டெலிகிராப்’ ஏட்டிற்கு அளித்த பேட்டி ஒன்றில், நடுவண் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஆசிரியர் பணிநியமனத்தின் போது இட ஒதுக்கீடு பின்பற்றப்படத் தேவையில்லை என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் மிகவும் நகைப்புக்குரியதாகும். ஆசிரியர் பணி நியமனத்திக்கு போதிய அளவிற்கு தகுதியான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் கிடைக்க வில்லை என்பதாகும். ‘சமூகநீதி’ வேடமிட்டு மறைந்திருக்கும் காங்கிரஸ் கபடதாரிகள் இப்படித்தான் அவ்வப்போது அம்பலப் படுகின்றனர்.

நடுவண் அரசிற்கு சொந்தமான உயர்கல்வி நிலையங்களின் ஆசிரியர் பணி நியமனங்களில் மட்டுமல்லாது, தனியார் கல்லூரிகளிலும் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த நடுவண் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அவரைக் கேட்டால், இது குறித்து ‘தேசிய’ அளவில் பொதுக் கருத்து வளர்த்தெடுக்க வேண்டும் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்.

மாணவர்களின் நலன் கருதியே பத்தாம் வகுப்புத் தேர்வு இரத்து செய்யப்படுகின்றது என்று தோன்றினாலும், இதற்குள் பல்வேறு சூட்சமங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

ந்தியாவில், பள்ளிக் கல்வியுடன் கல்வியை முடித்துக் கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 1990- 1991 ஆம் கல்வியாண்டில், 42.6% விழுக்காடாக இருந்தது. இவ்வெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு அரசுகளாலும் பல்லாயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்ட நிலையிலும் கூட 2004 ஆம் ஆண்டு வெறும் 40.67% விழுக்காடாகவே குறைந்தது. (பார்கக்க் : தி டைமஸ் ஆப் இந்தியா, 19, சனவரி 2004). இது தற்பொழுது சுமார் 39% விழுக்காடாக உள்ளது. மேலும், பள்ளிக்கல்வி பெறும் மாணவர்களில் வெறும் 11% விழுக்காட்டினரே கல்லூரி வரை சென்று படிக்கின்றனர் என்பதும் கூடுதல் தகவலாகும் (பார்க்க : டெக்கான் க்ரானிக்கல், சூன் 27, 2009.) இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரே என்பதை இன்றைய சூழ்நிலையில் சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை.

இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வு இரத்து என்பது இவர்களை பள்ளிக் கல்வியை விட்டே ஓரங்கட்டும் நடவடிக்கையாகவும் அமையும். மேலும், பொதுத் தேர்வு இரத்து செய்யப்பட்டு ஆசிரியர்களிடம் மாணவர்கள் மதீப்பீட்டிற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது ஆசிரியரின் விருப்பு வெறுப்பு மதீப்பீடாக அமையவே வாய்ப்புள்ளன. மேலும், ஆசிரியர் மாணவர் உறவில் இது விரிசலையும் உண்டாக்கும். எனவே, மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பிடுதலும், ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்ச்சியான முறையில் மதிப்பீடுதலும் கூடிய மாற்றுத் தேர்வு முறை அவசியமாகின்றது. எனவே, பொதுத் தேர்வு இரத்து என்பது எதற்கும் தீர்வல்ல.

இன்றைய சூழ்நிலையில் மனஅழுத்தங்களுக்கு மிக முக்கியக் காரணிகளாக விளங்கும் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தலைமை தாங்கும் உலகமயத்தை விரட்டுவதை விட்டுவிட்டு, மாணவர்களின் கல்வியில் கைவைப்பது முரணாக உள்ளது.

மாநிலக் கல்வி வாரியங்களைக் கலைத்து விட்டு, அகில இந்தியாவிற்குமான பொது பள்ளிக் கல்வி வாரியம் ஏற்படுத்துவதென்பது, இந்தியாவில் தேசிய இனங்களுக்கு எஞ்சியிருக்கும் சில அதிகாரங்களையும் பறிக்கும் ஒடுக்குமுறைத் திட்டமாகும். மேலும், இந்தித் திணிப்பிற்கும் இது வழிவகுக்கும். இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள், அதன் மாநிலக் கல்வி வாரியங்களைக் கொண்டு அந்தந்த இனத்து மக்களின், பண்பாடு, வரலாறு உள்ளிட்டவற்றை ஓரளவாவது தெரிந்து கொள்வதற்கான ஏற்பாட்டையும் இது சிதைத்து விடும். இதைத் தான் இந்தியத் தேசியக் காங்கிரஸ் விரும்புகிறது. எதிர்க்கட்சி என்பதால் தான் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல பாசாங்கு செய்கிறது, பாhப்பனீய பா.ச.க. ஒரு வேளை, பா.ச.க. ஆட்சியிலிருந்தால், இதே போன்ற திட்டத்தை அமல்படுத்தி ‘அகண்ட பாரத’க் கனவுகளை மாணவர்களுக்கு அள்ளி விட்டிருப்பார்கள்.

சொந்தநாட்டு மக்களின் உழைப்பையும் உடைமைகளையும் அயலானுக்குத் திறந்து விட்ட காங்கிரஸ் கட்சி, தற்பொழுது கல்வியிலும் அதனை செய்யத் துடிக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புகுந்து வணிகம் செய்திட அவற்றை அனுமதிக்கக் கோரும் ‘வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒழுங்குமுறை மசோதா’வை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறார், கபில் சிபில்.

ஆஸ்திரேலியாவில் வடநாட்டு மாணவர்கள் மீது நடைபெற்ற இனவெறித் தாக்குதல்களைத் தவிர்க்கவே இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கத் தேவை எழுந்துள்ளது என்றும் வாதிடுகின்றார், கபில் சிபில். அமெரிக்கா உள்ளிட்ட ‘வளர்ந்த’ நாடுகள் பெரும்பாலானவற்றில் உயர் கல்வி அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றவை என்பதும் தனியார் பல்கலைக்கழகங்கள் அங்கு குறைவு என்பதும் மத்திய அமைச்சர் கபில் சிபில் அறியாததல்ல. இருந்த போதும், அது குறித்து அலட்டிக் கொள்ளாத கபில் சிபில், கல்வியில் தனியார் நிறுவனங்கள் போடும் ஆட்டங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

தமிழகத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளும் ‘நன்கொடை’ என்ற பெயரில் நடத்தி வரும் வசூல் வேட்டையை, பல்வேறு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ள நிலையிலும், கண்துடைப்புக்காக சில கல்லூரிகளில் சோதனை நடத்திவிட்டு பிரச்சினை, தீர்ந்ததென்று செயல்படுகின்றது தமிழக அரசு. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கல்வித் துறையை கூறுபோடுவதற்கு தில்லி ஏகாதிபத்தியம் திட்டமிட்டுக் கொண்டிருக்க, ‘மாநில சுயாட்சி’ பேசும் தமிழக அரசோ, கண்மூடிக் கொண்டிருக்கிறது.

இந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் அ. முத்துக்கிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக, மின்சாரம் எப்பொழுது வருகிறது என்கிற தகவலை ஏறக்குறைய அனைவருமே கச்சிதமாய் தெரிந்து வைத்துள்ளனர். வீட்டில் மோட்டார் போட்டு தண்ணீரை ஏற்றுவது முதல் சிறுவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வரை, எல்லாமே அட்டவணையாக மாறிப் போனது. ஏதோ சென்னை போன்ற நகரங்களுக்கு இதில் விதிவிலக்காக கொஞ்சம் இரக்கம் காட்டப்படுவதாகத் தெரிகிறது. இந்தப் பின்னணியில்தான் கடந்த சில ஆண்டுகளாக, இந்தியப் பொது மக்கள் முதல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடும் விவாதங்கள் வரையிலும், பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் சூழல் வரையிலும் அனைத்திற்கும் ஒரு விஷயமே காரணம். அது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்.

Koodankulam இந்த காலகட்டத்தில் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று, "இந்த ஒப்பந்தம் அடிமைத்தனமானது, இந்திய நலன்களும், உரிமைகளும் அமெரிக்க அடகுக் கடையில் அடமானம் வைக்கப்பட்டு விட்டன' என்று பேச முயன்றால் உடனே பலரிடமும் கிடைத்தது ஒரே பதில்தான்: “ஏங்க அப்ப மின்சாரமே உங்களுக்கு வேண்டாமா? நாட்டையே இருட்டாக வச்சிருக்கலாமுனு நினைக்கிறீங்களா? மின்சாரம் இல்லைனா எப்படி தொழில் பெருகும்-நாடுன்னா வளர்ச்சி வேண்டாமாங்க?'' அணு உலைகள் அமைத்து மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கும் கனவு, இன்று சாமானியர்கள் வரை எட்டியுள்ளது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.

இன்னும் ஒருபடி மேலே சென்று, “அட இந்த அணு உலை எல்லாம் வெறும் முகமூடி தாங்க. உண்மையான நோக்கம் அணுகுண்டு தயாரிப்பதற்கான கச்சா பொருள் தயாரிப்புதாங்க'' என்றால் அதற்கும் உடனே பதில் வரும்: “என்னங்க நாடுன்னா அணு ஆயுதம் வேண்டாமா? அணுகுண்டு வச்சிருந்தாதான் நாலு பய நம்ம நாட்ட மதிப்பான், பயப்படுவான்.'' இது, சாமானியரின் குரல் என்றால், வேறு ஒரு முக்கிய நபரின் வாக்குமூலத்தையும் கேளுங்கள். மும்பை தாக்குதல்கள் நிகழ்ந்து நாடு ஒருவித கொதி நிலையில் இருந்த சம காலத்தில் பத்திரிகை பேட்டியாக இது அளிக்கப்பட்டது : “பாகிஸ்தானுடன் இன்றைய சூழ்நிலையில் போர் ஏற்பட்டால், அது கண்டிப்பாக ஓர் அணு ஆயுதப் போராகவே இருக்கும். பேய்களை ஒழிக்க வேறு வழி இல்லை. ஆனால் என்னால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். இந்த பேரழிவுக்குப்பின் ஒரு புதிய உலகம் மலரும். அது மிகவும் அற்புதமாகத் திகழும். அங்கே தீயவர்கள், தீவிரவாதிகள் இருக்க மாட்டார்கள்.'' இது வேறு யாரும் இல்லை, ஆர்.எஸ்.எஸ். பாசிச அமைப்பின் "சர்சங்சலக்' கே.எஸ். சுதர்சன் அளித்துள்ள பேட்டி.

1948 இல் அணு சக்தி கழகம் அமைக்கப்பட்டது. அது பின்னர் 1954இல் அணு சக்தித் துறையாக உயர்வு பெற்றது. அது முதல் அணு ஆற்றலை நன்மைக்கும் அமைதிக் கும் பயன்படுத்துவது என்கிற நோக்குடன் தன் பணியை அக்கழகம் தொடங்கியது. 1987இல் இத்துறை சார்பில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம் என்ற முழக்கம் பெரிதாக ஒலித்தது. 2000 ஆம் ஆண்டில் அது 45 ஆயிரம் மெகா வாட்டை எட்டிப் பிடிக்கும் என திருத்தப்பட்டது. இப்பொழுது அது மீண்டும் புதிய ஒப்பனையுடன் 2020 இல் 20 ஆயிரம் மெகாவாட் என்று கூறுகிறது. 1998-99 ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 90 ஆயிரம் மெகாவாட். இதில் அணு உலைகளிலிருந்து பெறப்பட்டவை வெறும் 1840 மெகாவாட் மட்டுமே. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது 2 சதவிகிதம் மட்டுமே. 2000 இல் அது 3 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்பொழுது 14 அணு உலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஓர் உலை கூட அதன் அடைவு நிலையை எட்டியதில்லை. தாராப்பூர், கல்பாக்கம், நரோரோ, காக்ராபர், கைகா ஆகிய இடங்களில் தலா இரண்டு அணு உலைகளும் ராவத்பாட்டாவில் நான்கு உலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால் தான் அடைவு நிலையை எட்ட இயலவில்லை என வெளிப்படையாகவே முன்னாள் கப்பற்படைத் தளபதி டாக்டர் பி.கே. சுப்பாராவ் தெரிவிக்கிறார். நாம் மிக எளிதாக இன்று அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் மற்றும் காற்றாலைகளின் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவையும், அதற்கு அரசு செய்யும் செலவையும், அணு உலைகளுக்கும் அரசு செலவிட்டுள்ள பெருந்தொகைகளுடன் ஒப்பிட்டால் உண்மை விளங்கும். அணு உலைகளுக்காக மத்திய அரசு கணக்கிட முடியாத அளவுக்கு அரசு வருவாயை இழந்துள்ளது. இப்பொழுது அவர்கள் 2020 இல் 20,000 மெகாவாட் என்று சொல்லும்போதுகூட அதற்கான செலவை அறிவிக்க மறுக்கிறார்கள். ஆனால் நிபுணர்கள் அதனை 80 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடுகிறார்கள்.

இத்தனைப் பெரும் தொகையை அரசால் இன்று ஒதுக்க இயலாது என்பதற்காகவே 1962 இல் இயற்றப்பட்ட அணுசக்தி சட்டத்தை இப்பொழுது ஒரு பெரிய குழு திருத்தம் செய்யும் வேலையில் இறங்கி யுள்ளது. இந்தத் திருத்தம் மிகவும் ஆபத்தான நோக்கம் கொண்டது. முதன் முறையாக அணு உலைகள் அமைப்பதில் தனியாருக்கு அனுமதியளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் அணு உலை அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி யுள்ளன. பிரான்சின் அர்வேரா (அணூதிஞுணூச்) நிறுவனம், மகாராட்டிர மாநிலத்தின் ஜைத்தா பூரில் ஆறு அணு உலைகளை அமைக்க இருக் கிறது. அந்த நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா, கஜகஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் சொந்தமான யுரேனிய சுரங்கங்கள் உள்ளன. கூடங்குளத்தில் மொத்தம் 8 அணு உலைகள் அமைக்க ரஷ்யா இசைவு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் ஹரிப்பூரில் அமெரிக்க நிறுவனம் அணு உலைகள் அமைக்க இருக்கிறது. இவை தவிர குஜராத்தில் மீதிவிதீ, ஒரிசாவில் பிட்டீ சொனாப்பூர், ஆந்திராவில் கோவாடா, மகாராட்டிரத்தின் மாத்பன் என இந்தியாவில் திரும்பிய பக்கம் எல்லாம் இனி அணு உலைகள்தான். மேற்குலக நாடுகள் கடந்த 25 ஆண்டுகளாக அணு உலைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அவை அனைத்தையும் மெல்ல மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டும் பணியை தீவிரமாக செய்து வருகின்றன.

இத்தனை அணு உலைகளை அமைக்கும் அதே வேளையில், இவை அனைத்தையும் எத்தகைய ஜனநாயக நடைமுறையையும் பின்பற்றாமல், ஒரு சர்வாதிகார நடைமுறையில் மிகத் துரிதமாக அதிகார வர்க்கம் தன் மனம் போன போக்கில் செயல்படுகிறது. இதில் அரசியல் கட்சிகள் முதல் அப்பகுதி பொது மக்கள் வரை எவரும் ஆலோசிக்கப்படுவதில்லை. மக்கள் கருத்தாய்வு என்கிற நடைமுறைகள் கூட காவல் துறையின் தடிகளின் நிழலில் நடத்தப்படும் நாடகமாக மாறிப் போய் விட்டன. சுற்றுச் சூழல் மதிப்பாய்வு அறிக்கை என்பதுகூட, நாடாளுமன்றம் முதல் சாமானிய மக்கள் வரையிலும் நாட்டில் எவரிடமும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இந்த அணு உலைகள் குறித்த சாதாரண தகவல்களைக்கூட நீங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது. அத்தகைய ஆபத்தான சட்டமாக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக இந்த 1962 அணு சக்தி சட்டம் விளங்குகிறது.

ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டில் எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படாத சூழலில், மக்கள் இந்த தகவல்களைப் பெறுவது மிகவும் அவசியமாகிறது. அதனை அவர் களுக்கு அளிப்பது அரசின் ஜனநாயகக் கடமையே அன்றி வேறு அல்ல. இந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு இப்படியான விஷயங்களில் எந்த அக்கறையும் இல்லை. இடதுசாரிகளைப் பொருத்த வரை, அவர்கள் அணு ஆயுதத்திற்கு எதிரானவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறார்கள்; ஆனால் அணு உலைகள் அமைப்பதை ஆதரிக்கிறார்கள். இருப்பினும் அணு உலையை ஆதரிக்கிறவர்கள் கூட, அந்தப் பகுதியில் பூர்வக்குடிகளாக வாழ்பவர்களின் இடப்பெயர்வு, பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் தலையிடாதது பெரும் முரண்பாடாகவே இருக்கிறது.

கடற்கரை ஒழுங்குச் சட்டம், கடற்கரைப் பாதுகாப்பு சட்டம் என பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, கடற்கரையிலிருந்து 500 மீட்டர் பகுதிக்குள் மனிதர்கள் வசிப்பது, வணிக நடவடிக்கைகள் என அனைத்தையும் அது தடை செய்தது. ஆனால் இவற்றுக்கு நேர் மாறாக, தமிழகத்தில் இரு உலைகளும் கடற்கரை அருகிலேயே அமைந்துள்ளன. இப்பொழுது அமையவிருக்கும் பல அணு உலைகளும் இதே வகையில்தான் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த கடற்கரை சார் சட்டங்கள் உள்நோக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. கடல் சார் மக்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மேல்தட்டு மக்களுக்கும் சொகுசான தங்கும் விடுதிகள், கேளிக்கைத் தளங்கள் அமைப்பது என பெரும் அநீதி அரங்கேறி வருகிறது. மேலும், கிராமங்களை அப்புறப்படுத்திவிட்டு அங்குள்ள மோனோசைட், தோரியம், செர்டியம், கார்நெட், ரூடைல், இல்மெனைட் போன்ற தாதுக்களை, கனிமங்களை அறுவடை செய்யும் நோக்கம் இருப்பதாகவும் தெரிகிறது.

2004இல் தமிழகத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஏற்படுத்திய இழப்பு மிகக் கொடூரமானது. அதுவும் குறிப்பாக கல்பாக்கம் உலையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி எஸ்.பி. உதயக்குமார் "தெகல்கா' வார இதழில் "கதிர் வீச்சு சுனாமி' என்றொரு கட்டுரை எழுதினார். அது, ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய அணு விஞ்ஞானிகள் பலர் இது குறித்து கவலை தெரிவித்தனர். கல்பாக்கத்தில் செர்னோபில் அளவுக்கு ஒரு பெரும் விபத்து நடைபெறுவதற்கான பல வாய்ப்புகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இத்தகு ஆபத்துகளை எல்லாம் உணர்ந்த இந்திய பிரதமர், உடனே அணு சக்தி கழகத் தலைவர் அனில் ககோட்கரை விரைவாக கல்பாக்கத்துக்கு அனுப்பினார். வெளிநாட்டு நிபுணர்கள் அவசர கதியில் வரவழைக்கப்பட்டனர். ராணுவம் களமிறங்கியது. அங்கிருந்து 15 ஆயிரம் பேர் அசுர வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். அங்கு பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களில் 200–300 பேரை காணவில்லை என தகவல்கள் கசிந்தன. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் சிலர் கூட அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். கல்பாக்கம் தொலைபேசி நிலையம் மூழ்கிய தால் அனைத்து தொலைபேசிகளும் செயல் இழந்தன. தனியார் கைபேசிகள் மட்டுமே அப்பொழுது இயங்கின.

அங்கு பொதுவாக தரையில் குவிக்கப்படும் மென் கதிர் வீச்சுடைய கழிவுகள் அனைத்தையும் கடல் அலை அடித்துச் சென்று விட்டதாக விஞ்ஞானி வி.டி. பத்மநாபன் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கிறார். இந்த மென் கதிர்வீச்சு கழிவுகள் நிலத்தடி நீரிலும், கடலில் உள்ள மீன்கள் உண்டு, அதன் வழியாக மனித உடலை கதிர்வீச்சு வந்தடையும். இது, பலவித நோய்கள் முதல் விதவிதமான புற்றுநோய் வரை ஏற்படுத்த காரணமாக அமையும். ஏற்கனவே கல்பாக்கம் சுற்று வட்டாரத்தில் பல கிராமங்களில் உள்ள புற்று நோய்கள் குறித்து வி.டி. பத்மநாபன் பல ஆய்வுக் கட்டுரை களை தீவிர கள ஆய்வின் அடிப்படையில் எழுதியுள்ளõர்.

1953 இல் அமெரிக்காவின் அல்பன்-ட்ராயி என்ற இடத்தில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அங்கிருந்த அணு உலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் லிட்டர் கதிர்வீச்சுக் கழிவு மிசிசிப்பி ஆற்றில் கலந்தது. அது அந்த ஆற்றின் மொத்த நீளத்திற்கும் படுகைகளை நாசப்படுத்தியது. 1971இல் கூர்க்ஸ் அணு உலை முற்றாக தண்ணீரில் மூழ்கியது. இன்றும் கூட உலகில் 10 அணு உலைகளும், 50 அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளும் கடற்கரைகளில் மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளதாக "கிரீன் பீஸ்' அமைப்பு தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

மறுபுறம் ரஷ்யாவின் செர்னோபில் விபத்து, நவீன வரலாற்றின் முக்கிய நிகழ்வாக மாறிப்போனது. 1986 ஏப்ரல் 25 அன்று உக்கிரைன் பிரதேசத்திற்கே ஒரு துயர நாளாக நிலைத்து நிற்கிறது. விபத்து நடந்தவுடன் 93 ஆயிரம் பேர் இறந்தனர். அடுத்த சில ஆண்டுகளில் மட்டும் ரஷ்யாவில் 60 ஆயிரம் பேரும், ÷பலாரஸ் பகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் சடலங்களாக மாறினர். அங்கிருந்து 2000 மைல் தொலைவில் சுவீடன் நாட்டில் ஆயிரக்கணக்கான மான்கள் செத்து மடிந்தன. மொத்தம் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வரலாற்று நிகழ்வுகள் மனித இனத்திற்கே பல ஆழமான படிப்பிடினைகளை வழங்குகிறது. ஆனால் அரசதிகாரம் மட்டும் இவைகளிலிருந்து பாடம் கற்க மறுக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்ட நாடுகளே பல விபத்துக்களை சந்திக்க நேரும்பொழுது, மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் நிலையைப் பற்றி யோசிக்கக்கூட மனம் தயங்குகிறது. இவற்றின் அடிப்படையில்தான் குறைந்தபட்சமாக பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளையேனும் முறையாக செய்ய வேண்டிய தேவை எழுகிறது.

பொதுவாக, ஓர் அணு உலையின் மய்யக் குவியலிலிருந்து (Stack) 1.6 கிலோ மீட்டர் வரையிலான இடத்தை விலக்கல் பகுதி (Exclusion Zone) என்கிறார்கள். இந்தப் பகுதியில் உலை தவிர்த்த வேறு எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது. அதே போல் 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதியை பாதுகாப்பான பகுதி (Sterile zone) என்கிறார்கள். இந்தப் பகுதி மனிதர்கள் வசிக்க லாயக்கற்றது. கதிர்வீச்சு ஆபத்திலிருந்தும் ஒரு விபத்துச் சூழலில் உடனே மக்களை வெளியேற்ற இப்படியான பல பாதுகாப்பு நடை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இப்படியான எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணு உலையிலிருந்து 300-400 மீட்டர் தொலைவில்கூட வசிப்பிடமாக தற்காலிக கொட்டகைகள் அமைத்து வாழ்கிறார்கள் தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் வழியாக சென்றவர்களுக்கு அது துல்லியமாக விளங்கும். அருகில் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 25 ஆயிரம், இடிந்த கரையின் மக்கள் தொகை சுமார் 15 ஆயிரம். இது தவிர மனவாளக்குறிச்சி, சின்னவிளை, பெரியவிளை, மந்தைக்காடு புதூர், பரப்பற்× என பல கிராமங்கள் அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளன. கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். இதில் விவேகானந்தரும் திருவள்ளுவரும் விலக்கல்ல.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அடிமை சாசன ஒப்பந்தத்தால், இனி இந்திய அணுசக்தி துறை தனது தலைமை அலுவலகத்தை வாஷிங்டனுக்கு மாற்றியாகிவிட்டது. கடும் விதிமுறைகளில் இனி நம்மால் உண்மையாகவே ஓர் அணுவைக்கூட அசைக்க இயலாது. இனி ஒரு சிறு அணு சோதனையை நடத்தினால்கூட, மொத்த அணு உலைக்கான எரிபொருளும் நிறுத்தப்படும். கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என பல சுருக்கு கயிறுகள் நம்மை இறுக்கவே செய்கின்றன. இருப்பினும் இந்தியா வசம் இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயார் நிலையில் உள்ளன. அவை ஏவுகணைகளில் பொருத்தப்படாமல் பிரித்துதான் வைக்கப்பட்டுள்ளனவாம். இது தவிர்த்து 1000 அணு குண்டுகளுக்கான கச்சா பொருளை இந்தியா தன் கைவசம் வைத்துக் கொண்டுதான் அணு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதாக சிலர் மார்தட்டிக் கொள்கிறார்கள்.

இந்த அணு ஆயுத அந்தஸ்தை (?) அடைய நாம் எத்தகைய விலைகளை கொடுத்துள்ளோம். நாடு முழுவதிலும் யுரேனிய சுரங்கங்கள் உள்ள பகுதிகள்-சுத்திகரிப்பு ஆலைகள், அணு உலையை சுற்றியுள்ள பகுதிகள் என நாடெங்கும் விளிம்பு நிலை மக்கள் லட்சக்கணக்கில் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். புற்று நோய், உருச்சிதைந்த குழந்தைகள் பிறப்பது, எந்த அறிகுறியும் இல்லாமல் கருச்சிதைவு, குழந்தைகள் வித வித ஊனங்களுடன் பிறப்பது என சகிக்க முடியா துரயங்களும் அவலங்களும் முடிவற்று நீள்கின்றன. இதைவிட முக்கியமான செய்தி என்னவென்றால், அணு உலை விபத்து அல்லது கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்களுக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வரை எவரும் இழப்பீடு வழங்குவதில்லை. அணு தொடர்புடைய அனைத்தும் மர்மமாகவே உள்ளன.

இந்தச் சூழலில்தான் 2009 சூன் மாதம் 4, 5, 6 நாட்களில் கன்னியாகுமரியில் ஒரு தேசிய அளவிலான கலந்தாய்வு மற்றும் மாநாடு நடைபெற்றது (National Convention on The Politics of Nuclear Energy and Resistance). இதனை "அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் இயக்கம்' மற்றும் தில்லியில் உள்ள "அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் அமைப்புக்கான கூட்டமைப்பு' இணைந்து ஒழுங்கமைத்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு எதிர்ப்பு இயக்கங்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள், போராளிகள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கமித்தனர். அணு ஆயுதம், அணு ஆற்றல் தொடர்புடைய பல்வேறுபட்ட விவாதங்கள் நடைபெற்றன. பல கட்டுரைகள் அங்கு வாசிக்கப்பட்டன. யுரேனியம் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படுவது, சுத்திகரிக்கப்படுவது, உலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது முதல் கழிவை சுத்திகரிப்பது வரையிலான பல கட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகள், நடைமுறை குளறுபடிகள் குறித்து அறிஞர்கள் விவாதித்தனர். கன்னியாகுமரி தீர்மானம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது.

Nuclear waste கூடங்குளம் அணு உலையால் தமிழகம் மட்டுமின்றி, கேரளாவின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட உள்ளன. இலங்கை மற்றும் சில தெற்காசிய நாடுகள் வரை இதன் பாதிப்புகள் பரவ வாய்ப்புள்ளன. எனவே, முன்னெப்போதைக் காட்டிலும் விழிப்படைய வேண்டிய தருணமிது; அல்லது மறைந்த சூழலியலாளர் அசுரன் கூறியது போல் தமிழர்களே பிணமாகத் தயாராகுங்கள்! 

ரஷ்யாவிலிருந்து கூடங்குளம் அணு உலைக்கான எரிபொருள் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தது. அங்கிருந்து சாலை வழியே அது கூடங்குளம் அணு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கூடங்குளம் வரையான இந்தப் பாதை நெடுகே அடர்த்தியான கிராமங்கள் உள்ளன. இவ்வாறு செரிவான யுரேனியத்தை கொண்டு செல்லும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் சாலையின் இரு பக்கங்களிலும் 100 மீட்டர் தொலைவுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த யுரேனியம் கொண்டு வரும் வாகனம் செல்லும். இது ஒரு பெரும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும். மக்கள் தொடர்ந்து இது குறித்து அறிவுறுத்தப்படுவார்கள். பொதுவாக குழந்தைகளை இன்னும் கூட அதிக தொலைவுக்கு கொண்டு செல்வது நடைமுறை. ஆனால் அப்படி எதுவும் இங்கு நடைபெறவில்லை. அந்த வாகனம் நாகர்கோவிலை கடக்கும்பொழுது, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனை ஒரு பெரிய வாகனம் என்று பலரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். எல்லோருக்கும் ஒரு நல்ல அளவு கதிர்வீச்சு "டோஸ்' இலவசமாய் கிடைத்ததுதான் மிச்சம்!

மேற்கண்ட இந்த பீப்பாய்களில் உள்ளது எல்லாம் எரிக்கப்பட்ட ஆற்றல் இழந்த யுரேனியம். அணு உலையிலிருந்து வெளியேறிய இவை அடுத்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். கூடங்குளத்திலிருந்து வெளியேறும் கழிவுகளை கையாளுவதற்கான திட்டம் உள்ளதா என்கிற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ஆனால் அந்தக் கழிவுகள் ரஷ்யா கொண்டு செல்லப்படும் என்கிறது அணு சக்தி துறை. நடக்குமா?

சுனாமியை விட கொடூரமான கதிர்வீச்சு

காசா நகர், உலகின் மிக அதிசயக் குடியிருப்பு. இது ஏதோ நிலவில் கட்டப்பட்ட ஓர் அபூர்வ குடியிருப்போ, தென் துருவத்தில் விஞ்ஞானிகளுக்காக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளோ அல்ல. இவைதான் இன்று இந்தியாவில் அணு சக்தி துறை எவ்வாறு செயல்படுகிறது; அது எவ்வாறு பாதுகாப்பு நடைமுறைகளை கையாள்கிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆழிப்பேரலை தமிழகத்தை ஒரு கை பார்த்த பிறகு தங்களின் வாழ்வாதாரங்களை, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்கதியாய் நின்ற லட்சக்கணக்கானவர்களில் இடிந்தகரை கிராமத்து மக்களும் அடக்கம். அதன் பிறகு பல இடங்கள் மாறி இவர்கள் கடைசியாக "காசா' (Churches Auxillary for Social Action - CASa) என்கிற அமைப்பு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளில் குடியேறினார்கள். அங்கு சுமார் 450 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் சுமார் 2000 பேர் வசித்து வருகிறார்கள். இது, திருநெல்வேலி மாவட்ட இடிந்தகரை கிராமத்தை அடுத்து உள்ளது.

அணு உலையின் பயன்பாடுகளை அறியாத ஒன்று மறியா மக்கள், மகிழ்ச்சி பொங்க தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்த வீடுகளில் குடியேறினர். இந்த வீடுகள் அணு உலையின் மய்ய குவியலிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் குறைவான இடைவெளி யில் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதியில் (Sterile Zone) மிகவும் அத்தியாவசியம் கருதி கட்டப்படும் கட்டடங்களுக்கு, அணு சக்தித் துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. இப்பொழுது கூடங்குளம் கிராமத்தில் மாடி வீடுகள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியான ஒரு சூழலில் இந்த திட்டத்திற்கு யார் அனுமதியளித்தனர் என்பது பெரும் கேள்வியாய் எழுந்து நிற்கிறது.

அங்குள்ள மக்களிடம் உரையாடிய போது, அவர்கள் அணு உலை இவ்வளவு அருகில் இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அறிந்திருக்கவில்லை. பொதுவாக ஓர் அணு உலை இயங்கத் தொடங்கினால், அதிலிருந்து இடைவிடாது கழிவுகள் பல வழிகளில் வெளி யேறிய வண்ணம் இருக்கும். இந்த ஆண்டு (2009) இறுதியில் கூடங்குளத்தின் முதல் அணு உலை இயங்கத் தொடங்கும் பொழுது, அது ஒவ்வொரு நொடியிலும் 130,000,000,000,000 கதிர் வீச்சுத் துகள்களை காற்றில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இப்படி துகள்கள் வெளிப்படும் என்று நாம் கூறவில்லை; அய்.நா. வின் அணுக் கதிர் வீச்சை ஆய்வு செய்யும் அறிவியல் குழுவே (UNSCEAR – United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation) விரிவாகக் கூறுகிறது. இவற்றின் அடிப்படையில்தான் விலக்கல் பகுதி, பாதுகாப்பான பகுதி என்றெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் "காசா' நகரோ அணு உலையின் மய்யக் கட்டடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு உட்பட்டு உள்ளது. அப்படி என்றால் அங்கு வசிப்பவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இளம்பருவ புற்று நோய், ரத்தப் புற்றுநோய் என பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. கிராமங்களில் கூட Goiter & Autoimmune thyroiditis போன்ற நோய்கள் காணப்படுகின்றன. ஆழிப்பேரலைக்குப் பின் வாழ்வாதாரங்கள் இழந்தவர்களுக்கு இது போல பல இடங்களில் அரசாங்கத்தின் புரிந்துணர்வில் தொண்டு நிறுவனங்கள் தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளன. ஒவ்வொரு குடும்பமும் அந்த வீடுகள் வழங்கப்படுவதற்கு முன்பு ஓர் ஒப்பந்தத் தின் விதிகளுக்கு உட்பட்ட பின்னர்தான் வீடுகள் வழங் கப்பட்டுள்ளன. அதன் ஒரு நகல் இப்பொழுது இந்த கட்டுரையாளரிடம் உள்ளது. அதில் பல அதிர்ச்சி தரும் பிரிவுகள் உள்ளன. குழந்தை, கணவர், மனைவி, உறவுகள், சொத்துக்கள், தொழில் தளவாடங்கள் என பலவற்றையும் இழந்து புதிய வாழ்வைத் தொடங்க ஒரு நம்பிக்கையை, ஆதரவை ஏங்கி நிற்பவர்களிடம் அரசு எப்படி பேரம் பேசுகிறது என அடுத்து வரும் வரிகளில் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

விதி 2 இவ்வாறு கூறுகிறது : “மேற்படி நிலத்தின் ஒப்படை செய்யப்பட்ட பகுதி, அரசுக்கு அவசியமான விரிவாக்கம் செய்யப்பட வேண்டியிருப்பதாக அரசாங்கம் கருதினாலும், மேற்படி ஒப்படை நிலத்தினை எந்த விதமான நஷ்ட ஈடும் தராமல் திரும்பப் பெற அரசுக்கு முழு உரிமை உண்டு.'' எப்படி உள்ளது கதை?! இந்த நிலத்தை விட்டு அவர்கள் செல்லும்பொழுது காலி செய்ய வேண்டுமாம். அடுத்த விதியைப் பாருங்கள்.

இது விதி 6 : “அரசாங்கத்திடமிருந்து முற்றிலும் இலவசமாகப் பெறப்படும் நிலம் மற்றும் புதிய வீடு ஆகியவை பெறப்பட்ட நபர் முன்னால் குடியிருந்த பகுதி நிலம் மற்றும் பகுதி நிலத்தை மீண்டும் உரிமை கொள்ளவோ உற்றார் உறவினர்களுக்கு தானாமாகக் கொடுக்கவோ தடை செய்யப்படும். மேற்படி திரும்பப் பெறப்படும் நிலத்தை அரசு நிலமாக கிராம மற்றும் வட்ட கணக்காக பராமரிக்கப்படும் தடையாணை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.''

அனைத்தையும் இழந்து நிற்பவர்களை இதை விட வயிற்றில் அடிக்க ஓர் அரசால் திட்டமிட முடியாது. அதைவிட பல இடங்களில் மீனவர்களிடம் அவர்களது கடற்சார் உரிமைகள் ரத்து செய்யும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது சார்ந்த ஓர் கள ஆய்வை மக்கள் இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்காக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் செய்துள்ள ஒப்பந்தங்கள், இந்திய கடற்கரை நெடுகிலும் சரி பார்க்கப்பட வேண்டும்.

"காசா' நகர மக்களின் உடல் நலம் தொடர்புடைய ஓர் ஆய்வை இப்பொழுது மேற்கொள்வது மிகவும் அவசியமானது. குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலை, பெண்களின் பேறுகால நோய் கள் குறித்த விவரங்கள், கடந்த பத்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு தொடர்புடைய விவரங்கள், பிறந்த எடை, இறப்பு விகிதம் உட்பட, பால்வாடிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கான தனித்துவமான நோய் கூராய்வு, குழந்தைகளின் நிற்கும் உயரம், உட்கார்ந்திருக்கும் பொழுது, கை நீளம், கை சுற்றளவு என இது போல் பல அடிப்படைத் தரவுகளை நாம் இப்பொழுது தொகுக்கத் தொடங்கினால்தான் நாளை வரும் புதிய மாற்றங்களை ஒப்பிட இயலும். குழந்தைகளின் அறிவுக்கூர்மையை ஓவியம் வரைதல் முறையில் சோதிக்க வேண்டும். இப்படியான மருத்துவம் சார்ந்த தகவல்கள் நம்முடைய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போல, ஒவ்வொரு மாவட்டத்திற்கான தகவல்களையும் அரசாங்கம் தன் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டாமா?

Sunday, August 16, 2009

தாலி இல்லாத் திருமணம் செல்லும்

1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

ஒரு விசித்திரத் தீர்ப்பு - குமுதம், 24-6-2009 ஓ பக்கங்களில்.... ஞாநி

இந்தியத் தேசியக் கொடியை எரிக்க முயன்று கைதான தமிழ்த் தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு விசித்திரமான நிபந்தனை விதித்திருக்கிறார். இந்த உத்தரவை ....தனமான உத்தரவு என்றுதான் சொல்ல வேண்டும். (நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்ல முடியாத ஒரு வார்த்தையை அங்கே நீங்களே நிரப்பிக் கொள்ளலாம்.)

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வீட்டு முன்னால் ஒரு கொடிக் கம்பம் நட்டு, ஒரு வாரத்துக்கு தினசரி காலை 6 மணிக்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றி மாலை 6 மணிக்கு அதை இறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. கொடியை ஏற்றியதும் சல்யூட் அடிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறிப்பிடப்பட வில்லை.

தேசியக் கொடியின் புனிதம், மாட்சிமை பற்றியெல்லாம் குற்றவாளிகள் உணர வேண்டும் என்று நீதிபதி விரும்யவபியதால் இவ்வாறு நிபந்தனை விதித்திருப்பதாகத் தெரிகிறது. நீதிபதிகளுக்கு இன்னும் ஆழமான அரசியல் அறிவு தேவைப்படுகிறது. இந்தியக் கொடியை எரிக்க முற்படும் ஒரு தமிழ் தேசியர் என்பவர், இந்திய தேசியத்தையே ஏற்காதவர். அவரை ஒரு வருடம் தினசரி கொடி ஏற்றச் சொன்னாலும் அந்தக் கொடி மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் வந்துவிடப் போவதில்லை. அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தால், தொடர்ந்து இந்திய தேசிய எதிர்ப்பாளராகத்தான் இருப்பார். ஒவ்வொரு முறை கொடியை ஏற்றும்போதும் மனசுக்குள் அதை அவர் திட்டிக்கொண்டே கூட இருக்க முடியும். அதை எந்த நீதிபதியும் கண்டுபிடித்து தண்டனை விதிக்கவே முடியாது.

தினசரி இந்த எட்டு தமிழ் தேசியர்களும் கொடி ஏற்றுவதை போலீஸ் கண்காணிக்க வேண்டும் என்று வேறு உத்தரவு. அதாவது காலை 6 மணிக்கு எட்டுப் பேர் வீட்டுக்கும் எட்டு போலீசார் போக வேண்டும். திரும்ப மாலை 6 மணிக்கும் போக வேண்டும். அரசு ஊழியர்களின் நேரம் சக்தி, சம்பளம் எப்படியெப்படியெல்லாம் வீணாக்கப்படுகின்றது பாருங்கள். ஜாமீன் கொடுப்பதற்கு இந்த மாதிரி நிபந்தனைகள் எல்லாம் விதிக்க எந்த சட்டப்பிரிவு, நீதிபதிக்கு அதிகாரம் தருகிறது என்று யாராவது சட்ட வல்லுநர்தான் விளக்க வேண்டும்.

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கை இனப்படுகொலை அம்பலம்

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

தமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.

காணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

canal4_1
canal4_21
canal4_31
canal4_41
canal4_51

Monday, June 29, 2009

நிஜமான என்கவுன்டர் - நீங்களும் நிகழ்த்தலாம்...??!!

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள்.


ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்குப் பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.

வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது. ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது. இந்த உரிமையைப் பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத் தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும் எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு. இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ - உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

பிரிவு 98: இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும், அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.

அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.

பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-

(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது...

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.

2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால் -

(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.

3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது. காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மைக் கைது செய்தால் அது நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்தச் செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும். ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும். வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.

பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.

1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,

2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,

3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,

4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,

5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,

6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,

மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.

பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப் பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும் நீடிக்கும். எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத் தெரியும்போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின்போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது. தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல. இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக் கண்டு தப்பியோடும்போது அவரைப் பிடித்து தாக்கக்கூடாது.

நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முயற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்து வைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.

பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

பிரிவு 103: கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம் செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது.

பிரிவு 104: பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும், அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.

பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.

திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.

பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.

பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான். பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.

இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள் உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும் தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் உருவாவதையும் தடுக்க முடியும்.


- சுந்தரராஜன் (sundararajan@lawyer.com)

(நன்றி: மக்கள் சட்டம்)



உலகின் அமைதியான நாடுகள்

எக்கானமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரப்படி உலகின் அமைதியான நாடு என்ற பெருமையை நார்வே பெற்றுள்ளது. இப்பட்டியலில் கடைசி இடம் இராக்குக்கு. இராணுவச் செலவு, ஆயுதவிற்பனை, ஊழல், மனித உரிமை மீறல், சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, குற்றச் செயல்கள் உள்ளிட்ட 24 பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அந்தப் பட்டியலின்படி மிக அமைதியான பத்து நாடுகள், அமைதி குறைந்த பத்து நாடுகளின் வரிசை வருமாறு:

மிக அமைதியான நாடுகள்:

1. நார்வே
2. நியுசிலாந்து
3. டென்மார்க்
4. அயர்லாந்து
5. ஜப்பான்
6. பின்லாந்து
7. சுவீடன்
8. கனடா
9. போர்ச்சுகல்
10. ஆஸ்திரியா

அமைதி குறைந்த நாடுகள்:

1. இராக்
2. சூடான்
3. இஸ்ரேல்
4. இரஷ்யா
5. பிலிப்பைன்ஸ்
6. தென்னாப்பிரிக்கா
7. ஹோண்டுராஸ்
8. இரான்
9. அமெரிக்கா
10. யேமன்

விரைவில் இந்தியா இதில் இடம் பிடிக்கும் !!!

குளிர்பானங்களைக் குடிப்பது நல்லதா?


குளிர்பானங்களை அடிக்கடி குடிக்கக் கூடாது. காரணம் என்னவெனில் எல்லா குளிர்பானங்களிலும் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. லெமன் சுவை கொண்ட குளிர்பானங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டுவகை அமிலங்களும் பற்களுக்கு எதிரி. இந்த அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலை சுரண்டி எடுத்துவிடும். குளிரூட்டப்பட்ட குளிர்பானங்களை பற்களில் படும்படியாகக் குடிப்பது மிக மிகக் கெடுதல். ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி நேரிடையாக வயிற்றுக்குள் அனுப்புவது ஓரளவு பரவாயில்லை. சில பன்னாட்டுக் நிறுவன குளிர்பானங்களில் அவை நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பூச்சி மருந்துகளை சேர்க்கிறார்கள். அவை உடல்நலத்துக்கு மிகவும் கேடானவை. அத்தகைய பானங்களை எப்போதும் தவிர்க்கலாம்.


நன்றி : WHO



Saturday, June 27, 2009

உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!

சென்னை மயிலாப்பூருக்கு அருகில் வாழ்பவன் நான். தினசரி அந்தப் பகுதியை குறைந்தபட்சம் இரண்டு முறை கடக்கும் வாய்ப்பு உண்டு. மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்து மதத்தில் பண்டிகைகளுக்குப் பஞ்சமில்லை. அதிலும் ஆத்திகமே கதியென்று கிடக்கிறவர்களுக்கு, சுற்றியிருக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு உணர்வையே இந்தத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. திருவிழா காலங்களை நம்பியே மட்பாண்டம் செய்யும் குயவர்கள், பொம்மை விற்பவர்கள், சின்னச்சின்ன பொருட்களை விற்கும் எளிய மனிதர்களின் வாழ்வு அடங்கியிருக்கிறது. இதைத் தவிர, இந்தத் திருவிழாக்களில் மிகப் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. இதுவும் எவ்வளவு நாள் நீடித்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. விரைவில் இவற்றுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது மட்டும் நி்ச்சயம்.

காரணம், ஒரு காலத்தில் பண்ருட்டியில் இருந்து மண் பொம்மைகள், சேலத்தில் இருந்து கல்சட்டிகள், ராமநாதபுரத்தில் இருந்து பனையோலை முறங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்படி தொலைவில் இருந்து வருவதெல்லாம் நின்றுவிட்டது. அதைவிட இன்னும் சோகம், இந்தத் திருவிழாவின்போது, பனையோலை முறத்தைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் முறத்தை நான் பார்த்தேன்.

மயிலையில் ஆண்டுதோறும் மிகப் பெரிதாக நடக்கும் விழா பிரம்மோத்சவம்-63 நாயன்மார்கள் விழா. திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்து, அதாவது ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்தத் திருவிழா நடைபெறுகிறதாம். 1909ல் 50,000 பங்கேற்றிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மக்கள் பாடலான "பீப்பிள்ஸ் பார்க் வழிநடைச் சிந்து" என்ற புத்தகத்தில் இந்தத் திருவிழா காலத்தில் நடத்தப்படும் "கிளாஸ்காரன் தண்ணீர் பந்தல்" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அப்போதிருந்து திருவிழாவில் தண்ணீர் பந்தல் நடப்பதற்கான ஆதாரமும் இருக்கிறது.

இந்த விழாக்களின்போது போக்குவரத்து மாற்றப்படும். ஏற்கெனவே குறுகலாக உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றங்கள், ஜனநெருக்கடி அதிகரிக்கும் போது என்ன நடக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. பிரம்மோத்சவம் விழாவின் போது, மயிலாப்பூர் பஸ் டெபோ அல்லது மயிலை குளம் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில், குறிப்பாக ஆர்.கே. மடம் சாலையில் உயரஉயரமான பந்தல்கால்களை நட்டு பந்தல் அமைக்கப்படும். அந்தப் பந்தல்கள் யாருக்கு நிழல் தரும் என்று தெரியவில்லை. ஆனால் உற்சவம் வரும் சாமி அந்த இடங்களில் நின்று செல்லும் என்று நினைக்கிறேன். இவை போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் சாலையின் நடுவில்தான் இந்தப் பந்தல்களை அமைப்பார்கள்.

ஏப்ரல் முதல் வாரம் அறுபத்து மூவர் திருவிழா நடந்த நேரத்தில் பகலில் போக்குவரத்து சுற்றிவிடப்பட்டது. அதிக மக்கள் கோயிலை நோக்கி வருவார்கள் என்பதால், அந்தப் பகுதியில் வாகனங்களைத் தடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரவில் அலுவலகம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கண்ட காட்சி எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

லஸ் கார்னர் துவங்கி, மந்தைவெளி அஞ்சல் நிலையம் வரை, குளத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகளிலும் ஏதோ பெரிய போரி்ல் அனைவரும் குத்துப்பட்டு சாய்ந்து கிடந்தது போல, எங்கும் நீக்கமற நிறைந்து காணப்பட்டன பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், சில பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள். இவற்றோடு பாதி தின்றுவிட்டு பிடிக்காமலும், அவசரத்திலும் கீழே போட்ட உணவுப் பண்டங்கள், சோறு, இனிப்பு எல்லாம் கலந்து மயக்கத்தை வரவழைக்கும் நாற்றத்தை சந்தோஷமாகப் பரப்பிக் கொண்டிருந்தன. எல்லா குப்பையையும் ஜனக்கூட்டம் தன் சக்தியைச் செலவழித்து மிதிந்து போயிருந்தது. அதனால் எல்லாம் நசுங்கி கெட்டுப் போகத் துவங்கியிருந்த நிலையில்தான் அந்த நாற்றம் எழுந்தது. குப்பைக்குள் மாணிக்கம் தேடு்ம் சிலரைப் போல், தளராத மனதுடன் குப்பையள்ளும் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அந்த இரவிலும் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தனர். அநேகமாக அடுத்த நாள் காலை வரை அவர்கள் குப்பையை அள்ளியிருக்க வேண்டும். அவ்வளவு குப்பை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதியை கடந்து சென்றபோதும்கூட, சூட்டில் நிறைய பிளாஸ்டிக் பைகள் தார்ச்சாலையோடு ஒட்டிக் கிடந்தன. நாற்றமும் நீங்கயிருக்கவில்லை.

வருபவர் என்ன சாதி, மதம் என்றெல்லாம் கேட்காமல் அன்னதானம் கொடுப்பது நல்ல பண்புதான். ஆனால் அந்த தானம் உலகை, இயற்கையை சூறையாடுவதாக இருக்கலாமா? பங்குனித் திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லக்கூடும். இவர்கள் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சரிதான். அதேநேரம், இத்தனை பெரிய கூட்டமும் நோய் தொற்றிக் கொள்ளாமல், சுகாதாரமாக இருக்க வேண்டாமா? அடியார்களுக்கு உணவு கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ள விரும்புபவர்கள், அதோடு குப்பையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமில்லையா? இல்லையென்றால் இந்த ஜென்மத்திலேயே அவர்களுக்கு மட்டுமின்றி யாருக்கு வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம்.

பிளாஸ்டிக் கோப்பைகள் புழக்கத்துக்கு வருதற்கு முன் இப்படிப்பட்ட பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பிளாஸ்டிக்கின் விலைதான் அதன் பரவலான பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் என்பது எந்த வகையிலும் நிலையான ஒரு தீர்வல்ல. வளங்களை சூறையாடுவது. அன்னதானம் வழங்க வேண்டும், அதிகமாகச் செலவும் ஆகக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தொன்னைகளும், பாக்குமட்டை தட்டுகளும் இருக்கின்றன. அதேநேரம், அவற்றை பயன்படுத்திய பின்னரும் முறைப்படி அகற்றுவது அவசியம்.

அன்னதானம் வழங்குகிறவர்கள் குப்பையை முறைப்படி அகற்ற குப்பைப் பெட்டிகள் வைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் மாநகராட்சி திருவிழா நேரங்களிலாவது இதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். அவசரத்துக்கு ஒதுங்குவதற்காக கோயிலின் வாசல் அருகிலேயே மொபைல் டாய்லெட் வைக்கிறார்கள். அது பத்து நாட்களுக்கு அங்கே நின்று நாறிக் கொண்டிருக்கும். ஆனால் கீழே போடும் குப்பையை அகற்ற ஏற்பாடு கிடையாது.

நாம் எந்த வகையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், எந்த நாகரிக நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளிக்கிழமையானால் கவிச்சி சாப்பிடாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். புரட்டாசி மாசம், ஐப்பசி மாசம் கறி சாப்பிடாதவர்கள் இருக்கிறார்கள். கோயிலுக்கு குளிக்காமல் போகக் கூடாது என்கிறார்கள். செருப்பை கழற்றி வைத்துவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையலாம் என்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் அறிவிக்கப்படாத ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றுவோர், ஏன் அன்னதானம் வழங்கப்படும்போது, சாப்பிட்டுவிட்டு அதே இடத்திலேயே பிளாஸ்டிக் தட்டையும் கோப்பையையும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்? சாமி சார்ந்த நடவடிக்கைகளில் சுத்தத்தை கடைப்பிடிப்பவர்கள், கோயிலுக்கு வெளியிலும் அதை கடைப்பிடிப்பதை எந்த அம்சம் தடுக்கிறது?

தன் வீட்டில் யாராவது குப்பையை இறைத்து வைத்துக் கொள்ள விரும்புவோமா? வெளியில் மட்டும் அதைப் பற்றி கவலைப்படாமல் இறைப்பது ஏன்? தன் வீடு குப்பையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், சாலை, பார்க், பீச், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு குப்பையை போடுகிறோம். ரயில் பயணங்களில் அடுத்தவர் முகத்தில் தண்ணீரும், உணவுப் பருக்கைகளும் தெறி்ப்பது மாதிரி கழுவுவதில், குப்பையை தூக்கியெறிவதில் கைதேர்ந்தவர்கள் நாம். சுற்றுலா தலமானாலும், ரயில் பயணம் என்றாலும் பொது இடத்துக்குப் போகும்போது குப்பையை சரியான இடத்தில் போடுவதுதான் முறை. இந்த எளிய பழக்கத்தை என்றைக்கு நாம் கற்றுக் கொள்கிறோமோ அன்றுதான் நாகரிக சமூகம் என்று அழைத்துக் கொள்கிற தகுதி நமக்கு இருக்கிறது.

நன்றி :- திரு . அதி

Thursday, June 25, 2009

குற்றவாளிக்கு ஜாமீன் உண்டு! விசாரணை கைதிக்கு ஜாமீன் கிடையாது! - உச்ச நீதிமன்ற விந்தை தீர்ப்புகள்


சத்திஸ்கர் மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பினாயக் சென் (Dr. Binayak Sen) என்பவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? யாருடைய சிறுநீரகத்தையாவது திருடியிருப்பாரா? கவனக்குறைவாக சிகிச்சை அளித்து யாருடைய மரணத்திற்காவது காரணமாக இருந்திருப்பாரா? கொள்ளை லாப வெறியோடு தனியார் மருத்துவமனை நடத்தினாரா? தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வைத்து மக்களை சுரண்டினாரா? மருந்து வியாபாரிகளோடு கள்ள உறவு வைத்து தேவையற்ற மருந்துகளை மக்களிடம் திணித்தாரா? அல்லது தன்னிடம் வரும் நோயாளிகளை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து இணைய தளம் மூலம் வணிகம் செய்தாரா? டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? அவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்?

யார் இந்த பினாயக் சென்?

தமிழ்நாட்டில் “வ”(VA) என்ற ஒலிக்கப்படும் எழுத்து மேற்கு வங்கத்தில் “ப”(BA) என்று ஒலிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் “டாக்டர் பினாயக் சென்”-ஐ தமிழ்ப்படுத்தினால் “விநாயக் சென்” ஆகிவிடும்.

இந்த டாக்டர் விநாயக் சென், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியில் MBBS மற்றும் MD ஆகிய படிப்புகளை மிகச் சிறப்பாக படித்துத் தேறியவர். பின்னர் 1976 முதல் 1978ம் ஆண்டுவரை புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக மருத்துவத்துறையில் ஆசிரியராக பணியாற்றியவர். பிறகு சமூக-பொருளாதார தளத்தில் பின் தங்கிய மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பணியை உதறிவிட்டு (பல தனியார் மருத்துவமனை அழைப்புகளையும் புறக்கணித்துவிட்டு) கூலித்தொழிலாளிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் வாழும் பகுதியில் சென்று மருத்துவ சேவை செய்ய ஆரம்பித்தார்.

வறுமை நிலையில் உள்ள மக்களின் நோய் அகற்ற, அவர் படித்த நவீன மருத்துவம் முழுமையாக பயன்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமுறைகளையும் பயன்படுத்திய அவர், சுகாதாரமான வாழ்வும் - ஊட்டச்சத்துமே நோயற்ற வாழ்வுக்கு சரியான வழி என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மக்களின் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-மருந்து மற்றும் மருத்துவ சேவை வியாபாரிகளின் கூட்டணிக் கொள்ளை காரணமாக மக்களுக்கு பயன்படாமல் போவதைக் கண்டு மனம் கொதித்தார். மேலும், சமூகத்தில் நிலவும் சுரண்டல் அமைப்பில் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் வளங்கள் சூறையாடப்பட்டு, அம்மக்கள் அகதிகளாக விரட்டப்படுவதை கண்டு கொதித்து எழுந்தார்.

ஆரோக்கியமும், நல்வாழ்வும் அடிப்படை மனித உரிமைகள் என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் வினாயக் சென், மக்கள் சிவில் உரிமைக் கழகத்துடன் (Peoples’ Union for Civil Liberties) இணைந்து செயல்படத் தொடங்கினார். (தமிழகம் போலல்லாது, சில மாநிலங்களில் அந்த அமைப்பு சாமானிய மக்களுக்காக உண்மையிலேயே செயலாற்றி வருகிறது) பின்னர் அந்த அமைப்பின் தேசியத் துணைத் தலைவராகவும், சத்திஸ்கர் மாநில செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் நலன்களை அரசு அமைப்புகள் புறக்கணித்தபோது, அம்மக்கள் மாவோயிஸ இயக்கங்களில் சேர்ந்தனர். மாவோயிஸ இயக்கப்பணியாளர்களை அரசுப்படையினரும், அரசின் ஆதரவு பெற்ற சல்வா ஜுடும் என்ற ஆதிக்க சக்திகளின் கூலிப்படையினரும் வேட்டையாடுவதைக் கண்டு மனம் பொறுக்காத அவர், உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்து அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற கூலிப்படையினரின் அராஜகங்களை அம்பலப்படுத்தினார். அதே நேரத்தில் அடித்தள மக்களின் நல்வாழ்வைப்பேண சமூக மருத்துவத்துறையிலும் பல சாதனைகளைப் படைத்தார். இதைப் பாராட்டும்விதமாக வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி, அதன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் “பால் ஹாரிசன்” என்ற பெருமை மிக்க விருதை கடந்த 2004ம் ஆண்டில் டாக்டர் வினாயக் சென்னுக்கு வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில்தான், கடந்த 2007 மே மாதம் 17ம் தேதி சத்திஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டார். பணிநிமித்தமாக கொல்கத்தா சென்றிருந்த அவரை, தலைமறைவாகி விட்டார் என்று காவல்துறையினர் பிரச்சாரம் செய்ததால் தாமாகவே காவல் நிலையம் சென்ற அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக அவர் மீது, சத்திஸ்கர் சிறப்பு பொதுப்பாதுகாப்பு சட்டம் (Chhattisgarh Special Public Security Act, 2006) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (Unlawful Activities (Prevention) Act, 2004) ஆகிய சட்டங்களின்படி கைது செய்துள்ளதாக சத்திஸ்கர் மாநில அரசு கூறுகிறது.

ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாராயண் சன்யால் என்ற கைதி எழுதிய கடிதங்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பியூஷ் குஹா என்பவருக்கு டாக்டர் விநாயக் சென் சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் குஹா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்றுள்ளதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தம்மை சித்ரவதை செய்து வெற்றுத்தாள்களில் காவல் மற்றும் சிறைத்துறையினர் கையொப்பம் பெற்றதாக பியூஷ் குஹா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறையில் உள்ள நாராயண் சன்யால், சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் டாக்டர் விநாயக் சென்னுக்கு எழுதிய கடிதத்தை அவருக்கு எதிரான சான்றாக காட்டுகிறது அம்மாநில அரசு. அந்த கடிதத்தில் டாக்டர் விநாயக் சென்-ஐ “தோழர்” என்று நாராயண் சன்யால் அழைத்துள்ளாராம். இது ஒன்றே போதுமாம், டாக்டர் விநாயக் சென்-னும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறுவதற்கு. ஆனால், நாராயண் சன்யாலை சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பலமுறை பார்த்துள்ள டாக்டர் விநாயக் சென், சிறையில் கைதிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் ஏதுமில்லை.

சத்திஸ்கர் மாநில அரசின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இதுவரை பத்திரிகைகளில் வெளிவந்ததுதான். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவர் மீது நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ஆனால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலோ, அரசு அதிகாரிகள் வழக்கம் போல தாமதப்படுத்தும் தந்திரங்களைக் கையாண்டு வருகின்றனர்.

இதன் உச்சகட்டம் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் 10ம் தேதி, நாட்டின் கடைசி நியாயஸ்தலமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்திலும் நடந்தேறியது. நீதியரசர்கள் அஷோக் பான், டி.கே. ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் டாக்டர் விநாயக் சென் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடினார்.

அப்போது டாக்டர் விநாயக் சென் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், எனவே அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் விநாயக் சென்னின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில் காவல்துறையினர் “கதை விட்டதை”ப்போல எந்த விவகாரமும் காணப்படவில்லை என்று ஆந்திர மாநில குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதம் அனைத்தையும் கேட்ட நீதியரசர்கள், “இந்த வாதங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் கூற வேண்டியது” என்று கூறினர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டே பதிவு செய்யாத நிலையில் இருப்பதால்தான் உச்சநீதிமன்றம் வர நேர்ந்தது” என்று எடுத்துரைத்தார்.

ஆனால் அவரது வாதத்தை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்த நீதியரசர்கள், டாக்டர் விநாயக் சென்-னை ஜாமீனில் விடமுடியாது என்று தீர்ப்பளித்தனர். டாக்டர் விநாயக் சென்னுக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நாள், டிசம்பர் 10, 2007. மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படும் ஒரு தினத்தில்தான் மனித உரிமைக்காக போராடிய ஒருவருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்-துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையும் ஒப்பு நோக்கலாம்.

மும்பையில் கடந்த 1993 ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டதாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் தத் உட்பட சுமார் 100 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தண்டனையை வழங்கிய நீதிபதி, நடிகர் சஞ்சய் தத் 100 ஆண்டுகள் வாழ்ந்து பல திரைப்பட சாதனைகளை படைப்பார் என்றும், அவரது ஆயுளில் 6 வருடங்களை மட்டுமே தாம் பறிப்பதாகவும் மிகுந்த கவலையுடனும், அக்கறையுடனும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்துள்ள நிலையில் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட சிலருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.பஞ்ச்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆக அரசியல் பின்புலமும், பிரபலமும் இருந்தால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்குக்கூட ஜாமீன் வழங்கும். ஆனால் இதுபோன்ற உயர்மட்ட தொடர்புகள் இல்லாத சாதாரண டாக்டர் விநாயக் சென் போன்றவர்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வழியில்லை.

சட்டத்தின் முன் அனைவரும் சமமாம். நம்புவோம்!

டாக்டர் விநாயக் சென்-ஐ விடுவிக்க கோரும் மனுவிற்கு:

http://www.freebinayaksen.org/

http://www.savebinayak.ukaid.org.uk/

http://www.binayaksensupport.blogspot.com/

நன்றி - சுந்தரராஜன் (sundararajan@lawyer.com)

(நன்றி: மக்கள் சட்டம்)

Thursday, June 18, 2009

குமுறுகிறார் அருந்ததிராய் - இனப்படுகொலை

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் - மனித உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் அருந்ததிராய் - அண்மைக்காலம் வரை விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று எழுதியவர் - இப்போது நியாயத்தை உணர்ந்து குமுறுகிறார்; ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையிலிருந்து:

“ஏன் இந்த மவுனம்? ‘இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயல்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை’ என்று இன்னொரு நேர்காணலில் இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா கூறியிருக்கிறார்.

சமுதாயத்தை ‘அச்சத்தில் உறைய வைக்கிற’ கொலைக் கும்பல்கள், ‘வெள்ளை வேன் கடத்தல்கள்’ பற்றி எல்லாம் சமரவீரா தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உள்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர். பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் இலங்கை அரசு பயன்படுத்துவதாக பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாற்றியுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு பொருளுதவியும், ஆய்த உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாது.

கொள்ளை போகும் தண்ணீர்- கட்டுரை

நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

தமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் உள்ளூர் நிர்வாகம், மக்களால் துரத்தியடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலைகொண்ட கோக கோலா நிறுவனத் தொழிற்சாலை. இந்த ஆலை ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் தாமிரபரணியில் இருந்து உறிஞ்சி, ஒரு லிட்டர் தண்ணீரை 13 ரூபாய்க்கு திரும்ப நம்மிடம் விற்கிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.

அடுத்ததாக சென்னை மாநகர மக்களின் (மேல்தட்டு, தொழிற்சாலைகள், மத்தியதர வர்க்கம் என்று வாசிக்கவும்) பகாசுர தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வயல்களின் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதை சட்டப்படியாக்கினால் கோக கோலா ஆலையைப் போலவே தனியார் நிறுவனங்களும், லஞ்சமாக அரசியல்வாதிகளும் சம்பாதிக்கலாம் என்ற என்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த ஏஜென்டான உலக வங்கி திட்டம் தீட்டி மாநில அரசுக்கு அனுப்பியிருப்பதாகக் கேள்வி. இவை இரண்டும் தண்ணீரை கூறு போட்டு விற்பதற்கு நடந்த, நடக்கப் போகிற உதாரணங்கள்.

இத்துடன் ஒரு கேலிக்கூத்தையும் மாநில அரசு தற்போது அரங்கேற்றி வருகிறது. கடல் நீரை குடிநீராக்குகிறேன், ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் முதல் தவணை வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தையும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமாக அல்லாமல், தண்ணீர் விற்பனை நிறுவனமாக பிற்காலத்தில் மாற்றிவிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வரிப்பணம் ஆயிரம் கோடி ரூபாயில் இந்த நாடகம் அரங்கேறுவதுதான் அவலம்.

நாட்டிலுள்ள நீர்நிலைகளில் உள்ள குடிப்பதற்கு உகந்த தண்ணீர்தான் கடலில் சென்று கலக்கிறது. இதை சேகரித்து பயன்படுத்துவதை விட்டுவிட்டு, அதை மாசுபடுத்தி கடலுக்குள் கலக்கவிட்டு, பின்னர் அதையே சுத்திகரித்து நமக்குத் தருகிறார்களாம். இந்த நிறுவனத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. கட்டாயம் காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கும் அரசியல்வாதிக்கும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

பொதுச் சொத்தான தண்ணீரை எப்படி அரசும் தனியாரும் கூட்டாக நம்மிடம் "விற்கிறார்கள்" என்பதற்கு இவை எல்லாம் தெளிவான உதாரணங்கள்.

தண்ணீர் விநியோகம்

இது மட்டுமில்லை. மாபெரும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு தீட்டப்படும் திட்டங்கள் எல்லாமே அதிகாரம் மிக்கவர்கள், வசதிமிக்கவர்களுக்காகத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழைகள் தாகத்தில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாமே வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பெரும் விவசாயிகளுக்கு பலனளிக்கின்றன.

இவ்வளவு காலம் வளங்குன்றும் வகையிலான பல்வேறு மறைமுகத் திட்டங்கள் அல்லது உள்ளூர் அரசுகளை ஊக்குவித்ததன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும், தண்ணீர் மாசுபாட்டையும் உலக வங்கி வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறையை பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பாக மாற்றும் வேலையில் உலக வங்கி ஈடுபட்டு வருகிறது. உலக தண்ணீர் சந்தையின் மதிப்பு ரூ. 40,000,00 கோடி என்று உலக வங்கி மதிப்பிட்டிருக்கிறது.

இதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று யோசிப்பவர்கள், கொஞ்சம் உட்கார்ந்து சிந்தித்தால் எல்லாம் புரிந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் பாட்டில் அல்லது கேன் குடிநீர் வாங்கிக் குடிப்பதைப் பற்றி யாராவது யோசித்திருப்போமா? போவோர் வருவோருக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்த, தண்ணீர் பந்தல் வைத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த நாம், இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம். அந்த வகையிலேயே அரசு அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. குடிதண்ணீருக்காக ஒவ்வொருவரும் வரி செலுத்தும்போதும்கூட, குடிதண்ணீரை காசு கொடுத்தே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அடுத்த ஆண்டு வாக்கில் உலகில் 250 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் இன்றித் தவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அரசு விநியோகிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். அப்பொழுது உருவாகும் பற்றாக்குறையை பயன்படுத்தி லாபம் சேர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இப்படியாக தண்ணீர் மீதான உரிமையை தனியார் மயமாக்கி, அதை ஒரு விற்பனைப் பொருள் ஆக்குவது வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று. ஏனென்றால் தண்ணீர் சுழற்சி என்பது வளங்குன்றாத வகையில் இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகளை மீறி, சந்தைத் தேவைக்கேற்ப சுரண்டப்படுவதால் தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். பண்டைக் காலங்களில் இருந்தது போல தண்ணீரை பயன்படுத்துவதற்கும், சமஉரிமைப் படி பகிர்ந்து கொள்வதற்குமான உரிமை உள்ளூர் சமூகத்திடமே இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்குவதன் தொடக்கமாக திருப்பூர் மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் குப்பை அப்புறப்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போல, இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 ஆம் ஆண்டு நியூ திருப்பூர் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 1273 கோடி ரூபாய் ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மகிந்த்ரா-மகிந்த்ரா, யுனைடெட் இன்டர்நேஷனல், வெஸ்ட் வாட்டர், பெக்டெல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் மகிந்த்ராவைத் தவிர மற்ற மூன்றும் பன்னாட்டு நிறுவனங்கள். காட் விதிமுறைப்படி, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் திருப்தியில்லாவிட்டாலும்கூட, ஒப்பந்தத்தை மாநகராட்சி திரும்பப் பெற முடியாது.

திருப்பூர் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகி உள்ளது முதல் கட்டம். ஓனிக்ஸ்-நீல் மெட்டல் பனால்கா போன்ற குப்பையள்ளும் வியாபாரத்தைப் போலவே, இந்த குடிநீர் விநியோக வியாபாரமும் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்றுவியாதி போல் விரைவில் பரவக்கூடும்.

தொழிற்சாலைகள் சுரண்டல்

இதுதவிர காலங்காலமாக மக்கள், விவசாயத்தைவிட தனியார் தொழிற்சாலைகளே தண்ணீரை சுரண்டிக் கொழுத்து வருகின்றன. தண்ணீர் பொதுச் சொத்து என்ற பெயரில், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் தண்ணீரை பெற்று வருகின்றன. (ஆனால் பொதுமக்கள் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்) நீர்வள ஆதார அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு இருபது ஆண்டுகளாக மாறவேயில்லை. ஆனால் மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் வசதியாக ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறது. தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் என்றால், அவை உறிஞ்சும் தண்ணீரை மட்டும் கணக்கிடுவது முறையற்றது. தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. அந்தத் தண்ணீரை ஆறு, குளம், வாய்க்கால், ஏரி, குட்டை, கடல் என்று பார்க்கும் இடமெல்லாம் திறந்துவிட்டு "பொதுச் சேவை" செய்து கொண்டிருக்கின்றன.

சராசரியாக வெளியேற்றப்படும் ஒவ்வொரு லிட்டர் மாசுபட்ட தண்ணீருக்கு பதிலாகவும் 5-8 லிட்டர் மாசுபடாத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த தண்ணீரின் அளவில் 35-40 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் இதை மறைத்துவிட்டு மக்கள் பயன்படுத்துவது அதிகம், விவசாயம் பயன்படுத்துவது அதைவிட அதிகம் என்று பலரும் பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தொழிற்சாலைகளுக்கும் சரி, தனிநபர்களுக்கும் சரி தண்ணீரை உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய அரசு விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். முதலாவதாக, தண்ணீர் பயன்பாட்டுக் கொள்கை என்பது பொது சுகாதாரம், தண்ணீர் கிடைக்கும்தன்மை சார்ந்தது. இரண்டாவதாக, திறன்மிக்க வகையில் தண்ணீரை பயன்படுத்தும் தொழிற்சாலை, மக்களை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் பெறும் தண்ணீரின் அளவுக்கு ஏற்பவும், லாபத்தில் ஒரு பங்கையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படியில்லாமல், மக்களின் வரிப்பணத்தை வாரி தனியார் முதலாளிகளுக்குத் தருவதை எந்தச் சமூகமும் எதிர்த்தே நிற்கும்.

தண்ணீர் உரிமைகளுக்காக போராடுவதுடன், தனிநபராக தண்ணீரை சேகரிப்பதில் நாம் நிறைய பங்காற்ற முடியும்.

- ஒவ்வொரு மாதத்துக்கான தண்ணீர் கட்டணத்தை பரிசோதனை செய்யுங்கள். குடிநீர் மீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதியுங்கள்.

- நீங்கள் நல்ல தண்ணீரை வாட்டர் டேங்கில் ஏற்றுபவராக இருந்தால் எத்தனை முறை மோட்டார் போட்டீர்கள் என்றும், லாரி மூலம் தண்ணீர் வரவழைப்பவர் என்றால் எத்தனை டேங்க் என்றும் கணக்கெடுங்கள்.

- குடிநீரையும் காசு கொடுத்து வாங்குகிறீர்களா? அதற்கு ஆகும் கட்டணத்தை கணக்கிடுங்கள்.

இவற்றை எல்லாம் செய்த பிறகு, எப்படி தண்ணீரை குறைவாகப் பயன்படுத்த முடியும் என்று திட்டமிட்டு செயலாற்றுங்கள்.

அன்றாட வேலைகளில் தண்ணீர் சேகரிப்பு

- பல் விளக்கும்போது கப்பில் எடுத்து பயன்படுத்தலாம், குழாயைத் திறந்துவிட வேண்டாம்.

- குளிக்கும் போது வாளியில் குளியுங்கள், ஷவர் வேண்டாம்.

- பிளஷ் டாய்லெட்டில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும், அதிக தண்ணீரை சேகரிக்கும் தொட்டி வேண்டாம்.

- காய்கறிகளை சட்டியில் இட்டு கழுவுங்கள், அப்படியே கழுவ வேண்டாம்.

- நடைபாதை, படி, வண்டி ஓடுபாதைகளை விளக்குமாறால் கூட்டுகள். தண்ணீரால் கழுவ வேண்டாம்.

- செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற, வாகனங்களைக் கழுவ வாளியை பயன்படுத்துங்கள், ஹோஸ் பைப் வேண்டாம்.

(இன்று உலக நீர் நாள். இந்த நாளில் நீரை சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வுடன் நமது நீர் உரிமை, அதற்கு நாம் கொடுக்கும் விலை பற்றி சிந்திப்பது அவசியம். அந்த நோக்கத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது)

நன்றி: கோபர் டைம்ஸ், டவுன் டு எர்த், தர்ஸ்ட் ஃபார் பிராஃபிட், ....

- பூவுலகின் நண்பர்கள், சென்னை